அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு; ரோந்து, கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு


அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு; ரோந்து, கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு
x
தினத்தந்தி 6 Aug 2019 10:45 PM GMT (Updated: 6 Aug 2019 7:22 PM GMT)

சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் நேற்று அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது பிரச்சினைக்குரிய பகுதியில் ரோந்து மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்த போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அரியாங்குப்பம்,

புதுச்சேரி மாநில சீனியர் போலீஸ் சூப்பிரண்டு (சட்டம்-ஒழுங்கு) ராகுல் அலவால் நேற்று காலை அரியாங்குப்பம் போலீஸ்நிலையத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். போலீஸ் நிலையத்தில் உள்ள வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் குற்றப் பதிவேடுகளை பார்வையிட்டார்.

அப்போது நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி போலீசாருக்கு அறிவுறுத்தினார். மேலும் ரவுடிகள் பட்டியலை பார்வையிட்ட அவர்களைப் பற்றிய விவரங்களை கேட்டறிந்தார்.

மேலும் அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சினைக்குரிய பகுதிகளை கண்டறிந்து அங்கு ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தும்படி உத்தரவிட்டார்.

தொடர்ந்து போலீஸ் நிலைய வளாகத்தை பார்வையிட்ட அவர் சில இடங்களில் குப்பைகள் சேர்ந்திருப்பதை பார்த்து அவற்றை அகற்றி சுத்தமாக பராமரிக்கும்படி கூறினார். மேலும் போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வழக்கு தொடர்புடைய வாகனங்களை பார்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது புதுச்சேரி தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story