அரியலூர் மாவட்டத்தில் மானியத்தில் உபகரணங்கள் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்


அரியலூர் மாவட்டத்தில் மானியத்தில் உபகரணங்கள் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 6 Aug 2019 10:45 PM GMT (Updated: 6 Aug 2019 8:01 PM GMT)

அரியலூர் மாவட்ட விவசாயிகள் மானியத்தில் விவசாய உபகரணங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் மத்திய அரசு திட்டத்தின்கீழ் நுண்ணீர் பாசன அமைப்பை விவசாயிகளிடத்தில் ஊக்குவிக்கும் நோக்கத்தில் துணை நிலை நீர் மேலாண்மை பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. புதிதாக நுண்ணீர் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு குழாய் கிணறு அமைக்க (பாதுகாப்பான குறு வட்டம்) 50 சதவீத மான்யம் அல்லது அதிகப்பட்சம் தொகை ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். மேலும் ஆயில் என்ஜின், மின் மோட்டார் வழங்குதலுக்கு 50 சதவீதம் மானியம் அல்லது அதிகப்பட்சம் தொகை ரூ.15 ஆயிரம், நீர் பாசன குழாய் அமைத்தல் 50 சதவீதம் மானியம் அல்லது அதிகப்பட்சம் தொகை ரூ.10 ஆயிரம் ஆகிய 4 இனங்களில் விவசாயிகளுக்கு மானியம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

நடப்பு 2019-20-ம் நிதியாண்டில் அரியலூர் மாவட்டத்திற்கு முதற் கட்டமாக 126 குழாய் கிணறுகள், 333 ஆயில் என்ஜின், மின் மோட்டார்கள், 300 நீர்பாசன குழாய்கள், 10 நீர் சேமிக்கும் தொட்டிகள் அமைக்க ரூ.1 கோடியே 11 லட்சத்து 45 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர், தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை களப்பணியாளர்களை அணுகி முன்பதிவு செய்து திட்டத்தில் பயன் பெறலாம்.

நுண்ணீர் பாசனத்திற்கு பதிவு செய்த பதிவு நகல் மற்றும் நுண்ணீர் பாசன பணியாணை நகல், சிட்டா அடங்கல், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவை இத்திட்டத்திற்கு தேவையான ஆவணங்கள் ஆகும். இத்திட்டத்தில் பணியாணை பெற்று நிர்ணயிக்கப்பட்ட பணியினை விவசாயிகள் தங்கள் சொந்த செலவில் மேற்கொண்டு முடித்து, அதற்கான பட்டியல் மற்றும் சொட்டு நீர் பாசனம் அமைத்ததற்கு 60 சதவீத தொகை விடுவித்ததற்கான சான்று ஆகியவற்றை சமர்ப்பித்தவுடன் பின்னேற்பு மானியமாக விவசாயிகள் வங்கி கணக்கில் உரிய மானியத் தொகை செலுத்தப்படும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Next Story