ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து: கர்நாடகத்தில் இன்று முதல் 2 நாட்கள் வெற்றி கொண்டாட்டம் பா.ஜனதா அறிவிப்பு
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து கர்நாடகத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 2 நாட்கள் வெற்றி கொண்டாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பா.ஜனதா அறிவித்துள்ளது.
பெங்களூரு,
கர்நாடக பா.ஜனதா பொதுச் செயலாளர் என்.ரவிக்குமார் எம்.எல்.சி. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
வெற்றியை கொண்டாடுகிறோம்
ஜம்மு-காஷ்மீர் பிரச்சினை 70 ஆண்டுகளாக இருந்தது. முன்னாள் பிரதமர் நேரு செய்த தவறால் இந்த பிரச்சினை இவ்வளவு ஆண்டுகளாக இருந்தது. இது பயங்கரவாதத்திற்கு உதவி செய்தது. இதனால் நமது ராணுவ வீரர்கள் ஏராளமானவர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். ஷாம்பிரசாத் முகர்ஜி, அந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய கோரி போராடி தனது உயிரை தியாகம் செய்தார். இதன் காரணமாக அந்த மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
இதன் மூலம் காஷ்மீர் இந்தியாவிற்குள் முழுமையாக சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் தான் காரணம் ஆகும். இந்த வெற்றியை கர்நாடகத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 2 நாட்கள் கொண்டாட முடிவு செய்துள்ளோம். மாவட்ட, தாலுகா தலைநகரங்கள் மற்றும் பூத் அளவில் இந்த வெற்றியை கொண்டாடுகிறோம்.
கட்சிகளுக்கு நன்றி
இந்த கொண்டாட்டத்தின்போது சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளதால், நமது நாட்டிற்கு கிடைக்கும் பலன்கள் குறித்து மக்களிடம் எடுத்து கூறப்படும். காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகள் குறையும். இந்த துணிச்சலான முடிவை எடுத்த பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறோம். இதை ஆதரித்த கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு என்.ரவிக்குமார் கூறினார்.
Related Tags :
Next Story