சென்னைக்கு கூடுதலாக குடிநீர் அனுப்பி வைப்பு, வாலாஜா ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் நிறுத்தம் - போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு


சென்னைக்கு கூடுதலாக குடிநீர் அனுப்பி வைப்பு, வாலாஜா ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் நிறுத்தம் - போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு
x
தினத்தந்தி 7 Aug 2019 3:45 AM IST (Updated: 7 Aug 2019 4:07 AM IST)
t-max-icont-min-icon

சென்னை குடிநீருக்காக கூடுதல் தண்ணீர் அனுப்பி வைப்பதால் வாலாஜா ஏரியில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

வடலூர்,

கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி, லால்பேட்டையில் உள்ளது. இந்த ஏரி மூலம் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதியில் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதிபெறுகிறது. இந்த ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

சென்னையில் ஏற்பட்ட தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க கடந்த ஏப்ரல் மாதம் கீழணையில் இருந்து வடவாறு வழியாக காவிரி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வீராணம் ஏரி நிரப்பப்பட்டது. இதன் காரணமாக ஏரியில் இருந்து வினாடிக்கு 74 கனஅடி தண்ணீர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஏரிக்கு நீர் வரத்து இல்லாததாலும், வெயில் காரணமாகவும் ஏரியின் நீர் மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 40.50 அடியாக இருந்தது. இதன் காரணமாக சென்னை குடிநீருக்காக அனுப்பப்பட்டு வந்த தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. நேற்று முன்தினம் சென்னைக்கு வினாடிக்கு 32 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று முதல் அது 28 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் குடிநீர் பற்றாக்குறையை போக்க வீராணம் ஏரியில் இருந்து அனுப்பி வைக்கப்படும் தண்ணீர் போதுமானதாக இல்லை. இதன் காரணமாக என்.எல்.சி. சுரங்கத்திலிருந்து வரும் தண்ணீரை சென்னைக்கு அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்தனர்.

என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் சேத்தியாத்தோப்பு அருகே வாலாஜா ஏரியில் நிரப்பப்படுகிறது. பின்னர் அந்த தண்ணீர் பரவனாற்றுக்கு அனுப்பப்படுகிறது. அங்கிருந்து வடக்குத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

பின்னர் அங்கிருந்து வீராணம் குழாய் மூலம் கடந்த மே மாதத்தில் இருந்து சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 10 முதல் 20 கனஅடி வீதம் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி வாலாஜா ஏரியில் இருந்து பாசனத்துக்காகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்துள்ளது. 5.5 அடி கொள்ளளவு கொண்ட வாலாஜா ஏரியில் நேற்று 3 அடி தண்ணீர் உள்ளது. என்.எல்.சி. சுரங்கத்தில் இருந்து தண்ணீர் வருவதால் ஏரியில் களிமண் தேங்கி, குறைந்த அளவே தண்ணீர் இருக்கிறது. இதுதவிர சேத்தியாத்தோப்பில் இருந்து பண்ருட்டி வரை உள்ள 10-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு வீராணம் குழாய் வழியாக சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

வீராணம் ஏரியில் இருந்து 28 கனஅடி, வாலாஜா ஏரியில் இருந்து 38 கனஅடி, ஆழ்துளை கிணறுகள் மூலம் 8 கனஅடி வீதம் நேற்று வினாடிக்கு மொத்தம் 74 கனஅடி தண்ணீர் கடலூர் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. வீராணம் ஏரியின் நீர்மட்டம் 39 அடியானதும், சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி நிறுத்தப்படும். அதாவது வீராணம் ஏரியில் இருந்து இன்னும் 10 நாட்களே சென்னைக்கு குடிநீர் அனுப்ப முடியும்.

இதனை ஈடுகட்டும் வகையில் வாலாஜா ஏரியில் இருந்து மேலும் அதிகளவு தண்ணீர் அனுப்பி வைக்க குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள புதிய ராட்சத மின்மோட்டார்கள் வாங்கப்பட்டுள்ளது. அந்த மின்மோட்டார்கள் வாலாஜா ஏரி அருகே பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே என்.எல்.சி. சுரங்கத்தில் இருந்து குறைந்த நீர் வெளியேற்றுவதால் ஏரிக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் விவசாய பாசனத்துக்காக ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மருவாய் கரைமேடு, கீழ்பாதி, கருங்குழி, மேட்டுக்குப்பம் மற்றும் அதை சுற்றியுள்ள 25 கிராமங்களில் பல ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து விவசாய சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், வாலாஜா ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதை அதிகாரிகள் நிறுத்தி விட்டனர். இதனால் பயிர்கள் கருகும் நிலை உள்ளது. பாசனத்துக்காக ஏரியில் இருந்து தண்ணீர் அனுப்பாவிட்டால் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றார். இதுபற்றி அதிகாரி ஒருவர் கூறுகையில், சுரங்கத்தில் இருந்து குறைந்த அளவே ஏரிக்கு தண்ணீர் வருகிறது. இருப்பினும் சென்னைக்கு அதிகளவு குடிநீர் தேவைப்படுவதால், இங்கிருந்து கூடுதல் நீர் அனுப்பி வைக்கப்படுகிறது. வாலாஜா ஏரியில் இருந்து பகலில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடவும், இரவில் சென்னைக்கு குடிநீர் அனுப்பவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். 

Next Story