கண்மாய்களில் மணல் அள்ளுவதாக புகார், விளக்கம் கேட்டு தாசில்தார்களுக்கு கோட்டாட்சியர் நோட்டீஸ்


கண்மாய்களில் மணல் அள்ளுவதாக புகார், விளக்கம் கேட்டு தாசில்தார்களுக்கு கோட்டாட்சியர் நோட்டீஸ்
x
தினத்தந்தி 11 Aug 2019 10:45 PM GMT (Updated: 11 Aug 2019 10:57 PM GMT)

திருப்பரங்குன்றம் பகுதி கண்மாய்களில் கோட்டாட்சியர் திடீரென்று ஆய்வு செய்தார். அப்போது கண்மாய்களில் மணல் அள்ளும் அனுமதியை ரத்து செய்ததோடு, தாசில்தார்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள கண்மாய்களில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாகவும், ஒரு இடத்தில் ஆழமாகவும், மற்றொரு இடத்தில் படுபாதாளமாகவும் தோண்டப்பட்டு மணல் அள்ளப்படுவதாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. வண்டல் மண் இல்லாத கண்மாய்களிலும் விவசாய நிலத்திற்காக வண்டல் மண் எடுப்பதாக கூறி அனுமதி பெற்று விட்டு டிப்பர் லாரிகளில் கிராவல் மண் எடுத்து ரெயில்வே இருவழிப்பாதைக்கு பயன்படுத்தி வருகிறார்கள் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் கண்மாய்களில் மணல் அள்ளுவது குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அவர் படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆதாரங்களோடு கண்மாய்களில் மணல் அள்ளப்படுவதாக மதுரை கலெக்டருக்கு புகார் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்தநிலையில் கலெக்டர் அறிவுரையின்பேரில் திருமங்கலம் கோட்டாட்சியர் முருகேசன் நேற்று திருப்பரங்குன்றத்தில் உள்ள கண்மாய்களுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதுதொடர்பாக கோட்டாட்சியர் முருகேசன் கூறும்போது, திருப்பரங்குன்றத்தில் உள்ள 5 கண்மாய்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தேன். கண்மாய்களில் மணல் எடுப்பதற்கான அனுமதி ரத்து செய்யப்படுகிறது. மேலும் தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மணல் அள்ளப்பட்டது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

தாசில்தார்களுக்கு கோட்டாட்சியர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story