அம்மாபேட்டை அருகே கோழியை விழுங்க முயன்ற மலைப்பாம்பு பிடிபட்டது


அம்மாபேட்டை அருகே கோழியை விழுங்க முயன்ற மலைப்பாம்பு பிடிபட்டது
x
தினத்தந்தி 12 Aug 2019 11:00 PM GMT (Updated: 12 Aug 2019 5:10 PM GMT)

அம்மாபேட்டை அருகே கோழியை விழுங்க முயன்ற மலைப்பாம்பு பிடிபட்டது.

அம்மாபேட்டை,

அம்மாபேட்டை அருகே சென்னம்பட்டி வனச்சரகத்துக்கு உள்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் யானை, மான், கரடி, மலைப்பாம்பு போன்றவை வசித்து வருகின்றன. சென்னம்பட்டியை வனப்பகுதியையொட்டி உள்ள சர்வேயர் தோட்டத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் ஆடுகள், மாடுகள் மற்றும் கோழிகளை வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை கோழிகள் சத்தம் போட்டு கத்தின. சத்தம் கேட்டதும் தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்த ராதாகிருஷ்ணன், கோழிக்கூண்டு உள்ள இடத்தை நோக்கி சென்றார். அப்போது அங்கு மலைப்பாம்பு ஒன்று கோழியை பிடித்து விழுங்க முயன்றதை கண்டதும் அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அவர் சென்னம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்ததும் வனச்சரகர் செங்கோட்டையன் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கோழிக்கூண்டில் இருந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். எனினும் அந்த கோழி இறந்து விட்டது. இதற்கிடையே இந்த தகவல் அந்த பகுதியில் பரவியது.

இதனால் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் மலைப்பாம்பை வேடிக்கை பார்க்க கூடிவிட்டனர். பின்னர் பிடிபட்ட மலைப்பாம்பை வனத்துறையினர் பாதுகாப்பாக கொண்டு சென்று சென்னம்பட்டி வனப்பகுதியில் விட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story