விவசாய நிலத்தில் எரிவாயு குழாய் பதிக்க விவசாயிகள் எதிர்ப்பு; மக்களை திரட்டி போராட்டம் நடத்தவும் கூட்டத்தில் முடிவு


விவசாய நிலத்தில் எரிவாயு குழாய் பதிக்க விவசாயிகள் எதிர்ப்பு; மக்களை திரட்டி போராட்டம் நடத்தவும் கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 12 Aug 2019 11:00 PM GMT (Updated: 12 Aug 2019 5:30 PM GMT)

விவசாய நிலத்தில் எரிவாயு குழாய் பதிக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும் மக்களை திரட்டி போராட்டம் நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

காங்கேயம்,

பாரத் பெட்ரோலிய நிறுவனம் சார்பில் கோவை இருகூரிலிருந்து பெங்களூரு தேவனகொந்தி வரை எரிவாயு கொண்டு செல்வதற்காக குழாய் அமைக்கப்பட உள்ளது. அதன்படி கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களின் விவசாய நிலம் வழியாக எரிவாயு குழாய் பதிக்கப்படுகிறது.

விவசாய நிலத்தில் எரிவாயு குழாய் பதித்தால் விவசாய நிலம் கடுமையாக பாதிக்கப்படும் என்று விவசாயிகள் கூறிவருகிறார்கள். இதனால் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும் எரிவாயு குழாயை சாலையோரமாக பதித்து மாற்று வழியில் கொண்டு வருமாறு விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டத்தை நடத்தினார்கள். இதற்காக ஒவ்வொரு கிராமத்திலும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

காங்கேயம் ஒன்றியத்திற்குட்பட்ட படியூர், சிவன்மலை கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம், அரசம்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதற்கு தற்சார்பு விவசாய சங்கம் ஒருங்கிணைப்பாளர் பொன்னையன் தலைமை தாங்கினார். ஐ.டி.பி.எல் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயபிரகாஷ், திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

எரிவாயு குழாய்களை விளைநிலங்களில் பதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது, மாற்று வழியில் செயல்படுத்துங்கள் என்று மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்ததைப் போல் தற்போதைய அரசும் இந்த திட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது.

அத்துமீறி விவசாய நிலத்தில் நுழைந்து எரிவாயு குழாய் பதித்தால் அதை தடுப்பது. மேலும் எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து பெரும்பான்மையான மக்களை திரட்டி போராட்டம் நடத்தவும், இந்த போராட்டத்தில் மக்களை இணைக்கும் வகையில் கையெழுத்து இயக்கம் நடத்துவது என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சிவன்மலை கிராம ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் உள்பட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story