கடையத்தில் பரபரப்பு சம்பவம்: கொள்ளையர்களை துணிச்சலுடன் விரட்டியடித்த வயதான தம்பதி


கடையத்தில் பரபரப்பு சம்பவம்: கொள்ளையர்களை துணிச்சலுடன் விரட்டியடித்த வயதான தம்பதி
x
தினத்தந்தி 12 Aug 2019 10:30 PM GMT (Updated: 12 Aug 2019 7:11 PM GMT)

கடையத்தில் வீடு புகுந்த கொள்ளையர்களை வயதான தம்பதி துணிச்சலுடன் விரட்டியடித்தனர். இந்த பரபரப்பு சம்பவம் தொடர்பான திக்..திக்.. காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன.

கடையம்,

நெல்லை மாவட்டம் கடையம் கல்யாணிபுரத்தை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 68). இவர் தனியார் நூற்பாலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி செந்தாமரை (65). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. ஒரு மகன் சென்னையிலும், இன்னொரு மகன் பெங்களூருவிலும், மகள் அமெரிக்காவிலும் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.

இவரது வீடு ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ளது. வீட்டை சுற்றிலும் தோட்டம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் சண்முகவேல் வீட்டு வராண்டாவில் அமர்ந்து செல்போனில் மகனுடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு பின்னால் தோட்டத்தில் பதுங்கி இருந்த ஒரு கொள்ளையன் நைசாக அங்கு வந்தான். அவன் திடீரென சண்முகவேலின் கழுத்தில் துண்டை போட்டு இறுக்கினான். அதை பார்த்து வீட்டுக்குள் இருந்த செந்தாமரை வெளியே ஓடி வந்தார். அவர் நாற்காலி உள்ளிட்ட கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் எடுத்து கொள்ளையன் மீது எறிந்து தாக்கினார்.

அதற்குள் தோட்டத்தில் மறைந்திருந்த மற்றொரு கொள்ளையன் அங்கு வந்தான். கொள்ளையர்கள் இருவரும் வயதான தம்பதியை அரிவாளால் வெட்ட முயன்றனர். ஆனாலும் அந்த தம்பதியினர் அங்கிருந்த பொருட்களை எல்லாம் எடுத்து கொள்ளையர்களை தொடர்ந்து தாக்கினர். ஒரு கட்டத்தில் கொள்ளையன் ஒருவன், செந்தாமரையின் கழுத்தில் கிடந்த 4½ பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டான்.

அதன்பிறகும் கொள்ளையர்கள் அரிவாளை காட்டி மிரட்டி அட்டகாசத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், மனம் தளராத வயதான தம்பதி அவர்களை விடாமல் தாக்கினர். இதில் நிலை குலைந்து போன கொள்ளையர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். கொள்ளையர்களுடன் துணிச்சலுடன் போராடியபோது, அரிவாள் வெட்டில் செந்தாமரையின் கையில் காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து உடனடியாக சண்முகவேல் கடையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். கொள்ளை நடந்த வீட்டில் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டு உள்ளது. அதில், கொள்ளையர்கள் நைசாக வீட்டுக்குள் புகுந்தது, அவர்கள் அரிவாளை காட்டி வயதான தம்பதியை தாக்குவது, கொள்ளையர்களை கணவன்-மனைவி இருவரும் துணிச்சலுடன் விரட்டியடிப்பது தொடர்பான திக்...திக்... காட்சிகள் பதிவாகி இருந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.

கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது. அது சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்துவிட்டு, தோட்டத்தின் எல்லை வரை ஓடி நின்று விட்டது. ஆனால் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.

இதுகுறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இதற்கிடையே, கொள்ளையர்களுடன் போராடியபோது காயம் அடைந்த செந்தாமரை கடையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

கொள்ளை சம்பவம் நடந்த வீடு போலீஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள பகுதியில்தான் உள்ளது. அங்கு கைவரிசை காட்டிய கொள்ளையர்களை வயதான தம்பதி துணிச்சலுடன் விரட்டியடித்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story