தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் 3-ம் கட்ட பணிகள் டிசம்பர் மாதம் முடிவடையும்: இன்பதுரை எம்.எல்.ஏ. பேட்டி


தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் 3-ம் கட்ட பணிகள் டிசம்பர் மாதம் முடிவடையும்: இன்பதுரை எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 12 Aug 2019 9:45 PM GMT (Updated: 12 Aug 2019 7:11 PM GMT)

தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் 3-ம் கட்ட பணிகள் டிசம்பர் மாதம் முடிவடையும் என இன்பதுரை எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

இட்டமொழி,

தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்பு வெள்ளநீர் கால்வாய் திட்டத்தின் 3-ம் கட்ட பணிகள் தற்போது மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள பெருமாள்நகரில் இருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை ராதாபுரம் எம்.எல்.ஏ.வும், தமிழ்நாடு சட்டமன்ற உறுதிமொழிக்குழு தலைவருமான இன்பதுரை நேற்று காலை பார்வையிட்டார். அவர் பெருமாள்நகர் தொடங்கி முனைஞ்சிப்பட்டி, பதைக்கம், காரியாண்டி பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார். தினையூரணி மணிமுத்தாறு கால்வாயின் குறுக்கே கட்டப்பட்டு வரும் வெள்ளநீர் கால்வாய் நீர்தேக்கம் கட்டும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்டம் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கனவு திட்டமாகும். அவர் சாத்தான்குளம் இடைத்தேர்தலில் நாங்குநேரி, ராதாபுரம் பகுதிகளில் உள்ள வறட்சியை கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை செயல்படுத்தினார். பின்னர் வந்த தி.மு.க. ஆட்சியில் ரூ.100 கோடி மதிப்பில் 2-ம் கட்ட பணிகள் நடைபெற்றது. அதன்பிறகு 2013-ம் ஆண்டு வரைக்கும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் ஏற்பட்ட சுணக்கம் காரணமாக பணிகள் தடைபட்டது. அதனை தொடர்ந்து இப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெள்ளநீர் கால்வாய் திட்டப்பணிகளை துரிதமாக முடிப்பதற்காக ரூ.800 கோடி நிதி ஒதுக்கி, முதல்வரின் நேரடி மேற்பார்வையில் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.

தற்போதைய 3-ம் கட்ட பணிகள் மூலைக்கரைப்பட்டி பெருமாள்நகரில் தொடங்கி நம்பியாற்றில் கால்வாய் இணைக்கப்படும். இந்த பணிகள் வருகிற டிசம்பர் மாதத்துக்குள் முடிவடையும். அதன்பிறகு நம்பியாற்றில் இருந்து எம்.எல். தேரி வரை 4-ம் கட்ட பணிகள் தொடங்கப்பட்டு விரைவாக முடிக்கப்படும். தற்போது 3-ம் கட்ட பணிகளில் செங்குளம் ரெயில்வே லைனில் ஒரு பெரிய பாலம் கட்டும் பணியும், பொன்னாக்குடியில் நாற்கர சாலையில் ஒரு பாலமும் கட்ட வேண்டியுள்ளது. நாற்கர சாலை பாலம் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த கால்வாய் மூலம் நாங்குநேரி, ராதாபுரம், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் சிறிது பகுதிகள் சேர்த்து 252 குளங்கள், 5260 கிணறுகள், 23,040 எக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும். தினையூரணி அருகே கட்டப்பட்டு வரும் நீர்த்தேக்கம் மூலம் அந்த பகுதிகளும் செழிப்படையும். 50 ஆண்டு கால வரலாற்றில் நதிநீர் இணைப்பு திட்டத்தில் தமிழ்நாட்டில் இந்த திட்டம் தான் முன்னோடியாக உள்ளது.

இவ்வாறு இன்பதுரை எம்.எல்.ஏ. கூறினார்.

நிகழ்ச்சியில் ராதாபுரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அந்தோணி அமலராஜா, வெள்ளநீர் கால்வாய் திட்ட கண்காணிப்பு பொறியாளர் ஞானசேகரன், செயற்பொறியாளர் ரமேஷ், விஜயகுமார், உதவி செயற்பொறியாளர் அருள் பன்னீர்செல்வம், வேலையா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story