ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலையில் கையாடல்: நிர்வாக இயக்குனர் பணி இடைநீக்கம்


ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலையில் கையாடல்: நிர்வாக இயக்குனர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 12 Aug 2019 10:15 PM GMT (Updated: 12 Aug 2019 8:36 PM GMT)

ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலையில் காற்றாலைக்கு உபகரணங்கள் வாங்கியதில் லட்சக்கணக்கில் பணம் கையாடல் செய்ததாக நிர்வாக இயக்குனர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

நாகர்கோவில்,

ஆரல்வாய்மொழியில் கூட்டுறவு நூற்பாலை உள்ளது. இந்த நூற்பாலையில் மின்சார தேவைக்காக 4 காற்றாலைகள் உள்ளன. இதில் 2 காற்றாலைகள் கடந்த ஆண்டு பழுதாகின. இதைத் தொடர்ந்து காற்றாலையில் பழுதான உபகரணங்களை மாற்ற நூற்பாலை நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி ஒரு தனியார் நிறுவனத்திடம் இருந்து ரூ.42 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பிலான 250 கிலோ வாட்ஸ் திறன் கொண்ட உபகரணம் (கியர் பாக்ஸ்) வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது. அப்போது நூற்பாலையின் நிர்வாக இயக்குனராக வீரமுத்து என்பவர் பணியாற்றினார். அவருடைய ஏற்பாட்டின் பேரில் காற்றாலையில் புதிய கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டது. ஆனால் கியர் பாக்ஸ் வாங்கியதில் பணம் கையாடல் நடந்ததாக சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றன.

வழக்குப்பதிவு

எனவே இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறு நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு சென்னை போலீசார் உத்தரவிட்டனர். அதன்படி நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நிர்வாக இயக்குனர் வீரமுத்து மற்றும் கியர் பாக்ஸ் சப்ளை செய்த சென்னையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவன உரிமையாளர் ஆகிய 2 பேரும் கூட்டாக சேர்ந்து, கியர் பாக்ஸ் வாங்கியதில் லட்சக்கணக்கிலான பணத்தை கையாடல் செய்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து நிர்வாக இயக்குனர் வீரமுத்து மற்றும் சென்னை தனியார் நிறுவன உரிமையாளர் உள்பட 2 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பணி இடைநீக்கம்

இதுபற்றி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலைக்கு 250 கிலோ வாட்ஸ் திறன் கொண்ட கியர் பாக்சுக்கு பதிலாக 225 கிலோ வாட்ஸ் திறன் கொண்ட கியர் பாக்ஸ்சை வாங்கி உள்ளனர். ஆனால் 225 கிலோ வாட்ஸ் திறன் கொண்ட கியர் பாக்ஸ் தொகைக்கு பதிலாக 250 கிலோ வாட்ஸ் திறன் கொண்ட கியர் பாக்சுக்கான தொகை செலுத்தப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டு உள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கில் பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் எவ்வளவு பணம் கையாடல் செய்யப்பட்டது என்ற சரியான விவரம் கிடைக்கவில்லை. சென்னையை சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளரிடம் விசாரணை நடத்திய பிறகுதான் எவ்வளவு பணம் கையாடல் செய்யப்பட்டது என்று தெரியவரும். இதுதொடர்பாக விசாரணை நடக்கிறது“ என்றார்.

இதற்கிடையே லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய நிர்வாக இயக்குனர் வீரமுத்து கடந்த ஜூலை மாதம் 31-ந் தேதி ஓய்வுபெற இருந்தார். ஆனால் ஓய்வுபெறுவதற்கு முந்தைய நாள் அவரை பணி இடைநீக்கம் செய்து அரசு உத்தரவிட்டது.

Next Story