காவிரிக்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - கலெக்டர் சி.கதிரவன் அறிவிப்பு


காவிரிக்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - கலெக்டர் சி.கதிரவன் அறிவிப்பு
x
தினத்தந்தி 13 Aug 2019 10:30 PM GMT (Updated: 13 Aug 2019 5:53 PM GMT)

காவிரிக்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கலெக்டர் சி.கதிரவன் அறிவித்து உள்ளார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இது படிப்படியாக 10 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட உள்ளது.

இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் வரும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. எனவே காவிரிக்கரையோரம் தாழ்வான பகுதிகளில் இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்கள் தங்கள் உடமைகள், கால்நடைகளை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

காவிரிகரையில் பொதுமக்கள் கூடுவதும், ஆற்றில் இறங்கி குளிப்பதை தவிர்க்க வேண்டும். இளைஞர்கள், சிறுவர்கள் ஆற்றில் இறங்கி நீச்சல் அடிக்க வேண்டாம். மீன்கள் பிடிப்பது, கால்நடைகளை குளிப்பாட்டுவது உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். செல்போன்கள் மூலம் ஆற்றங்கரையில் ஆபத்தான பகுதிகளுக்கு சென்று புகைப்படங்கள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, போலீஸ் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளின் சார்பிலும் தண்டோரா, ஒலிபெருக்கி ஆகியவை மூலம் பொதுமக்களுக்கு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இவ்வாறு அந்த அறிக்கையில் கலெக்டர் சி.கதிரவன் கூறி உள்ளார்.

முன்னதாக நேற்று காலை ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தென்மேற்கு பருவமழை மற்றும் காவிரிக்கரையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி ச.கவிதா, ஈரோடு ஆர்.டி.ஓ. முருகேசன், டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி (பொறுப்பு) ராம்குமார் உள்பட அனைத்து துணை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story