கேகாடு-தக்கர்பாபாநகர் இடையே, வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட பாலத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை


கேகாடு-தக்கர்பாபாநகர் இடையே, வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட பாலத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 13 Aug 2019 10:45 PM GMT (Updated: 13 Aug 2019 5:55 PM GMT)

மஞ்சூர் பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் கேகாடு-தக்கர் பாபாநகர் இடையே வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட பாலத்தை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மஞ்சூர்,

மஞ்சூர் அருகே உள்ள பிக்கட்டி பேரூராட்சிக்கு உட்பட்டது தக்கர் பாபா நகர். இந்த கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ளவர்கள் பெரும்பாலும் தினசரி கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இதனால் இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் தினந்தோறும் எடக்காடு பஜாருக்கு கேகாடு-தக்கர் பாபாநகர் சாலை வழியாக சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு பேரூராட்சி நிர்வாகம் இந்த சாலை தார்சாலையாக மாற்றப்பட்டது. இந்த சாலையால் பொதுமக்கள் மட்டுமின்றி, கிராமத்தை சுற்றிலும் உள்ள சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட தேயிலை தோட்ட விவசாயிகளும், இந்த சாலை மார்க்கமாக வாகன வசதியுடன் தேயிலை மூட்டைகளை ஏற்றியும், தோட்ட பணிகளுக்கு வாகனங்களை கொண்டு சென்றும் மிகவும் பயனடைந்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் இந்த பகுதியில் பெய்த பலத்த மழையால் காந்தி கண்டி பகுதியில் இருந்து கால்வாய்களில் அடித்து வரப்பட்ட வெள்ள நீரால் இந்த சாலையில் உள்ள பாலம் அடித்து செல்லப்பட்டது. இதனால் இந்த கிராம மக்கள் வேறு வழியின்றி லாரன்ஸ், காந்தி கண்டி மார்க்கமாக சுமார் 10 கி.மீ.தொலைவில் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக எடக்காடு அரசு பள்ளிக்கு வருகை தரும் மாணவ, மாணவிகள் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். இது மட்டுமின்றி தேயிலை தோட்டங்களில் தேயிலை பறிக்க செல்ல பாதையில்லாத காரணத்தால் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

எனவே, இதனை கருத்தில் கொண்டு சாலை துண்டிக்கப்பட்டு அடித்து செல்லப்பட்ட பாலத்தை சீரமைத்து தரப்பட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story