மேட்டூர் அணை திறப்பு: கடைமடை வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்


மேட்டூர் அணை திறப்பு: கடைமடை வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 13 Aug 2019 11:00 PM GMT (Updated: 13 Aug 2019 7:15 PM GMT)

மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளதால் கடைமடை வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பல்வேறு கட்சியினர் வலியுறுத்தினர்.

தஞ்சாவூர்,

தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. தலைமையில் சண்முகம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், கோவி.செழியன், டி.கே.ஜி.நீலமேகம் மற்றும் பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் நேற்று வந்திருந்தனர்.

பின்னர் அவர்கள் கலெக்டர் அண்ணாதுரையை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நெருக்கடியில் விவசாயிகள்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 100 அடியை தாண்டியுள்ள நிலையில் அணை திறக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் தொடர்ச்சியாக 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடி இல்லை. ஒரு சில இடங்களில் மின்மோட்டார் மூலமே சாகுபடி பணிகள் நடைபெற்றுள்ளது.

தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு இல்லாத நிலையில் விவசாயிகள் பெரும் நெருக்கடியில் உள்ளனர்.

துரித நடவடிக்கை

கர்நாடக அணைகள் நிரம்பி மேட்டூர் அணைக்கு வரும் காவிரி நீரை தஞ்சை மாவட்ட பாசனத்திற்கு முறைப்படுத்திட தமிழக பொதுப்பணித்துறை ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை. மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ள நிலையில் ஒரத்தநாடு, மதுக்கூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடைய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டை போல கல்லணைக்கால்வாய் கரைகளில் உடைப்பு ஏற்படாமல் இருக்க கரைகளை பாதுகாக்க வேண்டும்.

திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காவிரி பாசன தண்ணீர் வழித்தடங்களில் குடிமராமத்து பணிகள் முழுமையாக நடைபெறாத நிலையில் விவசாய பணிகளுக்கு தண்ணீர் வந்து சேருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

50 சதவீத பணிகள்

தஞ்சை மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் 50 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளது. சில இடங்களில் இந்த பணிகள் தொடங்கப்படவே இல்லை. டெல்டா மாவட்டங்களில் கடைமடை வரை தண்ணீரை கொண்டு செல்வதற்கும், இந்த பகுதி விவசாயிகள் முழுமையாக பயன்படுத்தி கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீர் பாசன ஆலோசனைக்கான இணை ஆணையர்(தனி அலுவலர்) தஞ்சையில் முகாம் அமைத்து கள நிலவரங்களை அறிந்து நீர் நிர்வாகத்தை அரசின் ஆலோசனையோடு நடைமுறைப்படுத்த வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள், விவசாய சங்க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு அந்த கூட்டத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள் அடிப்படையில் அரசின் நடவடிக்கைகள் அமைய வேண்டும். தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு காவிரி நீரை கடலுக்கு அனுப்பாமல் கடைமடைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அப்போது மாவட்ட செயலாளர்கள் கல்யாணசுந்தரம்(தி.மு.க), கோ.நீலமேகம்(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) பாரதி(இந்திய கம்யூனிஸ்டு), உதயகுமார்(ம.தி.மு.க), காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர்கள் லோகநாதன், பி.ஜி.ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் வயலூர் ராமநாதன், இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சிமியோன் சேவியர்ராஜ், கண்ணன்(தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்) மற்றும் விவசாயிகள் பலர் உடன் இருந்தனர்.

Next Story