காவிரியில் வெள்ளம் வந்தால் சமாளிக்க பொதுப்பணித்துறை 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளது


காவிரியில் வெள்ளம் வந்தால் சமாளிக்க பொதுப்பணித்துறை 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளது
x
தினத்தந்தி 13 Aug 2019 11:00 PM GMT (Updated: 13 Aug 2019 7:32 PM GMT)

காவிரியில் வெள்ளம் வந்தால் சமாளிக்க பொதுப்பணித்துறை 24 மணிநேரமும் தயார் நிலையில் உள்ளது என்று முதன்மை செயலாளர் மணிவாசன் கூறினார்.

திருச்சி,

கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 2 லட்சம் கனஅடிக்கும் அதிகமாக தண்ணீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மள, மளவென்று உயர்ந்தது. நேற்று அணையின் நீர்மட்டம் 102 அடியை தாண்டியது. இதனால் டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டார். முதல் கட்டமாக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் டாக்டர் மணிவாசன் நேற்று திருச்சி முக்கொம்புக்கு வந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வெள்ளப்பெருக்கினால் கொள்ளிடம் மேலணையின் 9 மதகுகள் உடைந்த பகுதியில் தற்காலிகமாக பலப்படுத்தும் பணிகள் நடந்து வருவதை பார்வையிட்டார்.

இதனை தொடர்ந்து அங்கு ரூ.387 கோடியில் புதிய கதவணை கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மணிவாசன் கூறியதாவது:-

முக்கொம்பு மேலணையில் உடைந்த பகுதியை பலப்படுத்தும் பணி துரிதகதியில் நடந்து வருகிறது. இன்னும் 4 நாட்களில் அங்கு ‘கான்கிரீட்’ அமைக்கும் பணி நிறைவடையும். காவிரியில் வெள்ளம் வந்தாலும் அதனால் பாதிப்பு ஏற்படாது. கர்நாடக அணைகளில் இருந்து எவ்வளவு தண்ணீர் திறந்து விடப்படுகிறது, பிலிகுண்டுவிற்கு வரும் நீரின் அளவு, மேட்டூர் அணைக்கு வந்து சேரும் நீரின் அளவு ஆகியவற்றை பொதுப்பணித்துறை துல்லியமாக கண்காணித்து வருகிறது.

காவிரியில் வெள்ளம் வந்தாலும் அதனை சமாளிக்க பொதுப்பணித்துறை 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளது. அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. எனவே விவசாயிகள் கவலைப்படவேண்டியது இல்லை. மேட்டூர் அணையில் இருந்து, முதல்-அமைச்சர் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டு உள்ளார். ஏற்கனவே டெல்டா மாவட்டங்களில் ஏரி, குளங்களை தூர்வாருவதற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் தூர்வாரும் பணிகள் நடந்து வந்தன. தண்ணீர் வந்து சேருவதற்குள் தூர்வாரும் பணிகள் முடிவடைந்து விடும்.

தண்ணீர் அதிக அளவில் வந்தாலும் கொள்ளிடத்தில் கட்டப்பட்டு வரும் புதிய அணைக்கு பாதிப்பு ஏற்படாது. வெள்ளத்தை சமாளிக்கும் வகையில் தான் பொதுப்பணித்துறை சார்பில் அளவீடு செய்து பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் வருகிற 2021-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிவடையும். பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள ‘லஸ்கர்’ உள்ளிட்ட பணியிடங்களை விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ். சிவராசு உடன் இருந்தார்.

Next Story