தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக பணி நியமனங்களில் முறைகேடு நடந்ததாக வழக்கு; அதிகாரிகளிடம் மனு அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக பணி நியமனங்களில் முறைகேடு நடந்ததாக வழக்கு; அதிகாரிகளிடம் மனு அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 13 Aug 2019 10:30 PM GMT (Updated: 13 Aug 2019 8:33 PM GMT)

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக பணி நியமனங்களில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

மதுரை,

தஞ்சையை சேர்ந்த முருகேசன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நான் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டேன். தமிழக நாட்டுப்புற கலைகள் தொடர்பாக ஆய்வு செய்து பல்வேறு புத்தகங்களை வெளியிட்டுள்ளேன். தமிழகத்தின் பாரம்பரிய, நாட்டுப்புற கலைகளை வளர்ப்பதில் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் சமீபகாலமாக தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் கல்வித்தகுதியற்றவர்களும், யூ.ஜி.சி. விதிகளுக்கு எதிராகவும் பலர் பல்வேறு பணிகளில் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல, தேவையில்லாமல் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், அலுவலர்களை தற்காலிகமாக நியமித்துள்ளனர்.

இந்த பணி நியமனங்களுக்கு ஏராளமான தொகை லஞ்சமாக பெறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. குறிப்பாக 2017-2018-ம் கல்வி ஆண்டில் இதுபோன்ற முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் 2017-2018-ம் கல்வி ஆண்டில் நடந்த பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் மற்றும் நிர்வாக பணியாளர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் வல்லுனர் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில், மனுதாரர் தனது குற்றச்சாட்டு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இதுவரை மனு அளிக்கவில்லை. எனவே மனுதாரர் தனது குற்றச்சாட்டை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுவாக அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வழக்கை வருகிற 26-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story