ஒகேனக்கல் காவிரி ஆற்றின் உபரிநீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை - அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி


ஒகேனக்கல் காவிரி ஆற்றின் உபரிநீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை - அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி
x
தினத்தந்தி 13 Aug 2019 11:00 PM GMT (Updated: 13 Aug 2019 8:53 PM GMT)

ஒகேனக்கல் காவிரி ஆற்றின் உபரிநீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் சீரான குடிநீர் வினியோகம் செய்வது தொடர்பாக பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லாகான், எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய தலைவர் டி.ஆர்.அன்பழகன், திட்ட இயக்குனர் காளிதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசுகையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக தண்ணீரில் ஏற்பட்ட கலங்கல் தன்மையால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் எடுக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் பொதுமக்களுக்கு குடிநீரை சீராக வினியோகிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் பழுதான போர்வெல்கள், குடிநீர் கைப்பம்புகளை சீரமைத்து குடிநீர் வினியோகிக்க வேண்டும். தேவையான இடங்களில் லாரிகள் மூலமாகவும் குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார்.

பின்னர் அமைச்சர் கே.பி.அன்பழகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

1971-ம் ஆண்டு தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் காவிரி ஆற்றில் வினாடிக்கு 2 லட்சத்து 60 ஆயிரம் கனஅடி தண்ணீர் கடந்த 12-ந்தேதி வந்தது. வெள்ளப்பெருக்கு காரணமாக ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் நீரேற்றும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்ய தேவையான நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எடுக்கப்பட்டு உள்ளன.

இதற்கிடையே ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளது. குடிநீருக்காக நீரேற்றம் செய்ய உகந்த வகையில் காவிரி ஆற்று நீர் தெளிவடைந்தவுடன் நீரேற்றும் பணிகள் தொடங்கும். ஒகேனக்கல் காவிரி ஆற்றின் உபரிநீரை கெண்டையன்குட்டை ஏரியில் நிரப்பி மாவட்டத்தின் இதர பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு கொண்டு செல்வதற்கான திட்டத்தை செயல்படுத்த அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story