தங்கள் மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்


தங்கள் மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
x
தினத்தந்தி 13 Aug 2019 11:15 PM GMT (Updated: 13 Aug 2019 9:16 PM GMT)

தங்களது மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு நடந்து வந்தது. அந்த கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் தங்களுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து குமாரசாமி அரசு கடந்த மாதம்(ஜூலை) 23-ந் தேதி கவிழ்ந்தது.

மேலும் கட்சிவிரோத செயல்களில் ஈடுபட்டதாக, ராஜினாமா செய்த காங்கிரசை சேர்ந்த ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் குமடள்ளி, பி.சி.பட்டீல், சுதாகர், எம்.டி.பி.நாகராஜ், எஸ்.டி.சோமசேகர், பைரதி பசவராஜ், முனிரத்னா, பிரதாப்கவுடா பட்டீல், ஆனந்த்சிங், சிவராம் ஹெப்பால், ரோஷன் பெய்க் ஆகியோரையும், ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த எச்.விஸ்வநாத், நாராயண கவுடா, கோபாலய்யா ஆகியோரையும், சட்டசபை கூட்டத்தை புறக்கணித்த காங்கிரசை சேர்ந்த ஸ்ரீமந்த்பட்டீல், சங்கர் என மொத்தம் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து அப்போது சபாநாயகராக இருந்த ரமேஷ் குமார் கடந்த மாதம் 28-ந் தேதி உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 17 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு தாக்கல் செய்யப்பட்டு 2 வாரங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. அந்த மனுக்கள் இன்னும் விசாரணைக்கு வரவில்லை. தங்களின் மனுக்கள் மீது உடனே விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்த்த அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோட்டகி சுப்ரீம் கோர்ட்டில் நேற்று ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

அப்போது, “தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்களும், சபாநாயகரின் முடிவுக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களின் மனுவை வருகிற 19-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று வக்கீல் முகுல் ரோட்டகி வாதிட்டார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்குமாறு கோரி பதிவாளரிடம் ஒரு கடிதம் வழங்கும்படி உத்தரவிட்டது.

Next Story