மானாமதுரை அருகே டிரான்ஸ்பார்மர் பழுதானதால் இருளில் மூழ்கிய கிராமம்; குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவிப்பு


மானாமதுரை அருகே டிரான்ஸ்பார்மர் பழுதானதால் இருளில் மூழ்கிய கிராமம்; குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவிப்பு
x
தினத்தந்தி 13 Aug 2019 10:00 PM GMT (Updated: 13 Aug 2019 9:49 PM GMT)

மானாமதுரை அருகே தீயனூரில் டிரான்ஸ்பார்மர் பழுதானதால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கிராம மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர். மின் மோட்டாரை இயக்க முடியாததால் குடிநீர் கிடைக்காமலும் தவித்து வருகின்றனர்.

மானாமதுரை,

மானாமதுரை அருகே உள்ளது தீயனூர் கிராமம். இந்த கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலப்பசலையில் இருந்து தீயனூர் கிராமத்திற்கு மின் வழிப்பாதை அமைக்கப்பட்டு அதில் டிரான்ஸ்பார்மர் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தீயனூரில் உள்ள மின் டிரான்ஸ்பார்மர் வெடித்து பழுதாகியது. இதுகுறித்து தீயனூர் கிராம மக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் செய்தனர். ஆனால் தற்போது வரை அந்த டிரான்ஸ்பார்மர் சரி செய்யப்படாமல் உள்ளது.

இதனால் அந்த கிராமத்தில் மின்விளக்கு எரியாமல் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் இப்பகுதி மக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். வீட்டில் உள்ள மின்சாதன பொருட்களை பயன்படுத்த முடியாமலும் அவதியடைந்து வருகின்றனர். முக்கியமாக மின்மோட்டாரை இயக்க முடியாததால் குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதனால் கிராமத்தில் கடந்த 2 வாரங்களாக குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து தீயனூர் கிராம மக்கள் கூறுகையில், டிரான்ஸ்பார்மர் பழுதானதால் மின்மோட்டாரை இயக்க முடியவில்லை. இதனால் எங்கள் கிராமத்தில் குடிநீர் வினியோகம் இல்லை. மக்கள் தண்ணீரை தேடி அருகே உள்ள கிராமங்களுக்கு நடந்து சென்று குடங்களில் தண்ணீர் பிடித்து, தலைச்சுமையாக கொண்டு வர வேண்டிய நிலை உள்ளது. இதுதவிர 10 நாட்களுக்கு மேலாக இருளில் தவித்து வருகிறோம். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக டிரான்ஸ்பார்மரை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story