நாமக்கல் ஒன்றியத்தில், திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு


நாமக்கல் ஒன்றியத்தில், திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 13 Aug 2019 10:45 PM GMT (Updated: 13 Aug 2019 11:03 PM GMT)

நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.85.84 லட்சம் மதிப்பில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல், 

நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாரப்பநாய்க்கன்பட்டி ஊராட்சி மணிகட்டிப்புதூர் அருந்ததியர் தெருவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.3.8 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டு உள்ளதையும், ரூ.79 ஆயிரம் மதிப்பீட்டில் நீர் உறிஞ்சும் குழிகள் அமைக்கப்பட்டு உள்ளதையும், மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் பணியினையும் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதேபோல் நருவலூர் ஊராட்சியில் ரூ.17.64 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டப்பட்டு வரும் பணியினையும், ரூ.1.7 லட்சம் மதிப்பீட்டில் மாடு கொட்டகை அமைக்கப்படும் பணியினையும், ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் வையநாய்க்கனூர் சாலை முதல் சுங்ககாரம்பட்டி சாலை வரையிலான சாலை மேம்பாட்டு பணியினையும் அப்போது அவர் பார்வையிட்டார்.

மேலும் பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், முதல்-அமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டுதல் திட்டம், பொதுநிதித்திட்டம், திடக்கழிவு மேலாண்மை திட்டம் என மொத்தம் ரூ.85 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வராஜ், அருணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story