அரசின் திட்டங்கள் ஏழை-எளியோரை சென்றடையும் வகையில் அலுவலர்கள் செயல்பட வேண்டும்


அரசின் திட்டங்கள் ஏழை-எளியோரை சென்றடையும் வகையில் அலுவலர்கள் செயல்பட வேண்டும்
x
தினத்தந்தி 14 Aug 2019 11:00 PM GMT (Updated: 14 Aug 2019 5:07 PM GMT)

அரசின் திட்டங்கள் ஏழை- எளியோரை சென்றடையும் வகையில் அலுவலர்கள் செயல்பட வேண்டும் என்று தமிழக அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட வளர்ச்சித்துறை கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாந்தா முன்னிலை வகித்தார். அரசு தலைமை கொறடாவும், தமிழக சட்டப்பேரவை மனுக்கள் குழுவின் தலைவருமான தாமரை ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் இக்குழுவின் உறுப்பினர்கள் ஆறுமுகம், சக்கரபாணி, விஜயகுமார், அன்பழகன், சந்திரசேகரன், தனியரசு, முருகன் மற்றும் குழு செயலாளர் சீனிவாசன், எம்.எல்.ஏ.க்கள் தமிழ்ச்செல்வன்(பெரம்பலூர்), ராமச்சந்திரன்(குன்னம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் தமிழக அரசின் மூலமாக ஏழை, எளிய மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் தகுதியுடைய அனைத்து பொதுமக்களும் பெறும் வகையில் அரசு அலுவலர்கள் அனைவரும் பணியாற்ற வேண்டும். அரசின் திட்டங்களை பெறுவதற்காக பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு, சரியான பதில்களை உடனுக்குடன் அளிப்பதுடன், அத்திட்டங்கள் மூலம் மனுதாரர் உரிய முறையில் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு உதவிட வேண்டும் என்று அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவை மனுக்கள் குழுவின் தலைவர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நடவடிக்கை

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் மனுக்கள் குழு எனது (ராஜேந்திரன்) தலைமையில், இம்மாவட்ட பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்வு செய்திடும் பொருட்டு, துறை அலுவலர்களுடன் மனுக்கள் மீது ஆய்வும் மறு ஆய்வு செய்யப்பட்டது. இவற்றில் பல மனுக்களின் மீதான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டும். இதர மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும், துறை அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் இக்குழுவால் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூடுதல் கட்டுமானப்பணி

அதனை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருவதன் அடிப்படையில் இட நெருக்கடியை குறைக்கும் வகையில், மருத்துவமனை வளாகம் அருகில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மருத்துவமனையின் கூடுதல் கட்டுமானப்பணிகளை சட்டப்பேரவை மனுக்கள் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர இக்குழுவினரால் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

நபார்டு திட்டத்தின் கீழ்

பின்னர் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் குரும்பலூர் பாரதிதாசன் உறுப்பு கல்லூரியின் மாணவ- மாணவிகளின் வசதிக்காக பெரம்பலூர்- களரம்பட்டி வழித்தடத்தில் ஒரு நாளைக்கு 3 முறைகள் இயங்கும் விதமாக புதிய வழித்தட பஸ்சை அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் கல்பாடி முதல் நெடுவாசல் வரை நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி மதிப்பீட்டில் 2.56 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலை பணிகள் நிறைவுற்ற நிலையில் அதனை இக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல், மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், திட்ட இயக்குனர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) நாகரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story