மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு: நெல் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளலாம்


மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு: நெல் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளலாம்
x
தினத்தந்தி 14 Aug 2019 10:45 PM GMT (Updated: 14 Aug 2019 5:54 PM GMT)

மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப் பட்டுள்ளதால் நெல் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆயத்தப்பணிகளை மேற்கொள்ளலாம் என கலெக்டர் அன்பழகன் அறிவுறுத்தினார்.

கரூர்,

நடப்பு 2019-ம் ஆண்டு காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணையில் இருந்து நெல் சாகுபடிக்கென நேற்று முன்தினம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதில் கரூர் மாவட்டத்தில், நடப்பாண்டு 13,300 ஹெக்டேரில் நெல் சாகுபடி பரப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு நெல் சாகுபடி மேற்கொள்ள ஆயத்தப்பணிகளான நிலம் தயாரித்தல், இடுபொருட்கள் தயார் செய்தல் ஆகிய பணிகளை விவசாயிகள் மேற்கொள்ளலாம். மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் தேவையான விதை நெல் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

விதை வினியோகம்

நடப்பு சம்பா பருவத்திற்கு தேவையான பி.பி.டி 5204, டி.கே.எம்.13, கோ (ஆர்) 50 மற்றும் குறுகியகால இரகங்களான கோ51 என மாவட்டத்தில் மொத்தம் 121 மெட்ரிக் டன் நெல் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பத்தாண்டுக்கு மேல் வெளியிடப்பட்ட இரகங்களுக்கு கிலோவிற்கு ரூ.10, பத்தாண்டுகளுக்குள் வெளியிடப்பட்ட இரகங்களுக்கு கிலோவிற்கு ரூ.20 அல்லது 50 சதவிகிதம் மானிய விலையில் நெல் இரகங்கள் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. விதை கிராம திட்டத்தின் கீழ் கிலோவிற்கு ரூ.17 அல்லது 50 சதவிகிதம் மானிய விலையில் விதை நெல் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

மானிய விலையில்...

சிறுதானிய விதைகள் சோளம் மற்றும் குதிரைவாலி விதைகள் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின்கீழ் கிலோவிற்கு ரூ. 30 வீதம் மானிய விலையில் வினியோகிக்கப்படுகிறது. பயறுவகைப் பயிர்களில் நடப்பு பருவத்திற்கு ஏற்ற துவரை, உளுந்து மற்றும் கொள்ளு விதைகள் இருப்பு வைக்கப்பட்டு, துவரை கிலோவிற்கு ரூ.54, உளுந்து ரூ.48 வீதம் மானிய விலையில் விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது. எண்ணெய்வித்து பயிர்களில் நிலக்கடலை விதைகள், தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் கிலோவுக்கு ரூ.36 மானியத்தில் வினியோகிக்கப்படுகிறது. எனவே கரூர் மாவட்ட விவசாயிகள் இவ்வாண்டு வேளாண்மையில் இரட்டிப்பு மகசூல் பெற்றிடவும், மும்மடங்கு வருமானம் பெருக்கிடவும் மேற்காணும் வேளாண் திட்டங்கள் மூலம் பயனடையலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story