கடற்கரை சாலையில் கலை விழா; முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்


கடற்கரை சாலையில் கலை விழா; முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 14 Aug 2019 11:00 PM GMT (Updated: 14 Aug 2019 10:42 PM GMT)

புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் கலைவிழாவை முதல்-அமைச்சர் நாராயணசாமி முரசு கொட்டி தொடங்கிவைத்தார்.

புதுச்சேரி,

புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத்துறை மற்றும் தஞ்சை தென்னக பண்பாட்டு மையம் சார்பில் கலை விழா கடற்கரை சாலை காந்தி திடலில் நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க விழா நேற்று மாலை நடந்தது. விழாவிற்கு கோகுலகிருஷ்ணன் எம்.பி. தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு முரசு கொட்டி விழாவினை தொடங்கிவைத்தார்.

விழாவில் புதுவை அரசு தலைமை செயலாளர் அஸ்வனி குமார், தஞ்சை தென்னக பண்பாட்டு மைய இயக்குனர் பாலசுப்ரமணியன், கலை பண்பாட்டு துறை செயலாளர் தேவேஷ் சிங், இயக்குனர் கணேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த கலை விழா இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறுகிறது. இதில் புதுவை மாநில கலைஞர்கள் மட்டுமின்றி அசாம், ஒடிசா, ஜார்கண்ட், அரியானா, கேரளா, மத்திய பிரதேசம், கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்துகொண்டு தங்கள் மாநிலத்தின் கலாசார கலைநிகழ்ச்சிகளை அரங்கேற்றுகிறார்கள்.

மேலும் இந்த கலைவிழா புதுவை கடற்கரை மட்டுமின்றி மணவெளி, உறுவையாறு, கூடப்பாக்கம், கன்னியக்கோவில் என 5 இடங்களில் நடைபெறுகிறது. காரைக்காலில் கலைவிழா வருகிற 17, 18 ஆகிய 2 நாட்கள் நடக்கிறது.

Next Story