மாவட்ட செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து, டெல்டா பாசனத்துக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும் - பி.ஆர்.பாண்டியன் பேட்டி + "||" + 25 thousand cubic feet for delta irrigation Water should be opened

மேட்டூர் அணையில் இருந்து, டெல்டா பாசனத்துக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும் - பி.ஆர்.பாண்டியன் பேட்டி

மேட்டூர் அணையில் இருந்து, டெல்டா பாசனத்துக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும் - பி.ஆர்.பாண்டியன் பேட்டி
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
மேட்டூர்,

சேலம் மாவட்டம் மேட்டூருக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன் நேற்று வந்தார். பின்னர் அவர் மேட்டூர் அணையின் வலது, இடதுகரை உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார். இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி டெல்டா பாசனத்திற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டூருக்கு நேரில் வந்து தண்ணீரை திறந்து வைத்தார். கர்நாடக, கேரள மாநிலங்களில் அதிகளவில் மழை பெய்ததால் அங்குள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு மேட்டூருக்கு அதிகளவில் தண்ணீர் வந்துள்ளது. இதனால் கடந்த 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடி செய்ய முடியாமல் அவற்றை இழந்த விவசாயிகள் தற்போது அணையில் இருந்து தண்ணீர் விடப்பட்டுள்ளதால் சம்பா சாகுபடியில் நேரடி விதைப்பு செய்து நாற்றுவிடும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் அக்டோபர் மாதம் 20-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் பாதிப்பு இல்லாமல் அதற்கு முன்னதாக பயிர்களை பாதுகாக்க வேண்டும். மேலும் ஏரி, குளம், குட்டைகள் வறண்டு கிடக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து பாசன தேவைக்காக 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் இந்த தண்ணீர் கல்லணைக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாகவே வரும்.

இதனால் பாசனம் பாதிக்கப்படும். எனவே மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து 15 நாட்களுக்கு வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி வரை தண்ணீரை திறந்து விட வேண்டும். அப்படி தண்ணீர் திறக்கப்பட்டால் மட்டுமே கடைமடை பகுதி வரை நீர் சென்று விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய முடியும். மேலும் டெல்டா பகுதிகளில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது உள்ள அளவிலேயே தண்ணீர் திறக்கப்பட்டால், எந்த பலனும் இல்லை. அதற்கு பதிலாக தண்ணீர் திறப்பதை நிறுத்தி விட்டலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது தமிழக காவிரி விவசாயிகள் சங்க நாகை மாவட்ட செயலாளர் ராமதாஸ், தர்மபுரி மண்டல தலைவர் சின்னசாமி, கொடைவாசல் ஒன்றிய தலைவர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.