விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த மதுபாட்டில்களை கைப்பற்றி கிராம மக்கள் சாலை மறியல்


விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த மதுபாட்டில்களை கைப்பற்றி கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 15 Aug 2019 11:00 PM GMT (Updated: 15 Aug 2019 8:09 PM GMT)

திருவரங்குளம் அருகே, விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த மதுபாட்டில்களை கைப்பற்றி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவரங்குளம்,

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே உள்ள திருக்கட்டளை ஊராட்சியை சேர்ந்த கிராம மக்கள் தங்கள் ஊரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு, திருக்கட்டளை ஊராட்சி பகுதியான கேப்பறையில் டாஸ்மாக் கடையை அகற்றியபோதும், தொடர்ந்து திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்கப்பட்டு வருகிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனக்கூறி மனு கொடுத்தனர்.

பின்னர் அவர்கள் கிராமசபை கூட்டம் முடிந்து கேப்பறைக்கு வந்தனர். அப்போது அங்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த மதுபாட்டில்களை கைப்பற்றிய கிராம மக்கள், மதுபாட்டில்களுடன் புதுக்கோட்டை சாலையில் கேப்பறையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் திருட்டுதனமாக மதுவிற்பனை செய்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினார்கள். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வல்லத்திராக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story