கோத்தகிரி அருகே விபத்து: மேரக்காய் தோட்டத்துக்குள் புகுந்த அரசு பஸ் - 50 பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்


கோத்தகிரி அருகே விபத்து: மேரக்காய் தோட்டத்துக்குள் புகுந்த அரசு பஸ் - 50 பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 15 Aug 2019 9:45 PM GMT (Updated: 15 Aug 2019 9:02 PM GMT)

கோத்தகிரி அருகே அரசு பஸ் மேரக்காய் தோட்டத்துக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இதில் 50 பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.

கோத்தகிரி,

கோத்தகிரியில் இருந்து பேரகணிக்கு நேற்று காலை 10 மணிக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இதனை பையங்கியை சேர்ந்த டிரைவர் ரமேஷ் என்பவர் ஒட்டினார். பஸ்சில் 50 பேர் பயணம் செய்தனர். மதர்லேண்ட் தேயிலை தொழிற்சாலை அருகே எதிரே பள்ளி வாகனம் ஒன்று வந்தது. அதற்கு வழி விட அரசு பஸ்சை டிரைவர் சாலையோரமாக திருப்பினார். அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை அரசு பஸ் இழந்தது. தொடர்ந்து சாலையோரம் உள்ள மேரக்காய் தோட்டத்துக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக பஸ்சில் இருந்த பயணிகள், டிரைவர் மற்றும் கண்டக்டர் கீழே இறங்கினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் அரசு போக்குவரத்து கழக கோத்தகிரி கிளை மேலாளர் கிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் சாலையோரம் மேரக்காய் தோட்டத்துக்குள் புகுந்து தொங்கிய நிலையில் நின்றிருந்த பஸ்சை மீட்கும் நடவடிக்கையை தொடங்கினர்.

அப்போது பயணிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் விபத்துக்குள்ளான பஸ்சை சிறை பிடித்தனர். மேலும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இதே பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு பஸ் கவிழ்ந்து விபத்துள்ளானது. அதில் பயணிகள் காயமடைந்தனர். எனவே இதுபோன்ற ஆபத்தான சாலையோரங்களில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும். இந்த வழித்தடத்தில் புதிய பஸ்களை இயக்க வேண்டும். ஓடும் பஸ்சில் டிரைவர் மற்றும் கண்டக்டர் செல்போன் பயன்படுத்தாமல் இருக்கும்படி உயர் அதிகாரிகள் அறிவுரை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதை கேட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பயணிகள் மற்றும் பொதுமக்கள் அரசு பஸ்சை விடுவித்து, அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது. மேலும் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

Next Story