தர்மபுரி மாவட்டத்தில் ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் இருமத்தூரில் கலெக்டர் மலர்விழி பங்கேற்பு


தர்மபுரி மாவட்டத்தில் ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் இருமத்தூரில் கலெக்டர் மலர்விழி பங்கேற்பு
x
தினத்தந்தி 15 Aug 2019 11:00 PM GMT (Updated: 15 Aug 2019 9:03 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இருமத்தூரில் நடந்த கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி பங்கேற்றார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் சுதந்திர தினவிழாவையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் நேற்று கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றன. அந்தந்த ஊராட்சி அலுவலகங்கள் முன்பு நடைபெற்ற இந்த கூட்டங்களில் ஊராட்சிக்குட்பட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் கலந்து கொண்டு கிராம வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தினார்கள். இந்த கூட்டங்களில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து சிறப்பு அலுவலர்கள் பங்கேற்று கூட்ட நடவடிக்கைகளை பார்வையிட்டனர்.

மொரப்பூர் ஒன்றியம் இருமத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி பங்கேற்று கூட்ட நடவடிக்கைகளை பார்வையிட்டார். கூட்டத்தில் உதவி கலெக்டர் சிவன்அருள், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன், வேளாண்மை இணை இயக்குனர் கைலாசபதி, கூட்டுறவு இணைபதிவாளர் சந்தானம், மாவட்ட வழங்கல் அலுவலர் தணிகாசலம், மாவட்ட மகளிர்திட்ட அலுவலர் ஆர்த்தி, துணைபதிவாளர் ரவிச்சந்திரன், தாசில்தார் கலைச்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயராமன், விமலன் உள்பட துறை சார்ந்த அதிகாரிகள், கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

வாக்குவாதம்

பென்னாகரம் ஒன்றியம் ஒன்னப்பகவுண்டனஅள்ளியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் விளை நிலங்கள் வழியாக எண்ணெய் குழாய்கள் பதிக்கும் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளதால் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்துக்கு விளைநிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்று தீர்மானத்தை கொண்டு வந்தனர்.

அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட புதுவாழ்வு திட்ட ஒருங்கிணைப்பாளர் தீபா, கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, வாக்குச்சாவடி நிலை அலுவலர் பெருமாள் மற்றும் ஊராட்சி செயலர் சண்முகம் ஆகியோர் தீர்மானத்தை கோரிக்கை மனுவாக எழுதி கொடுங்கள் என்று கூறினர். இதை ஏற்க மறுத்து விவசாயிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஏரியூர் மற்றும் சுற்றுவட்டார ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கோடி அள்ளி, அஜ்ஜனஅள்ளி, சுஞ்சல் நத்தம், தொன்னகுட்ட அள்ளி, ராமகொண்டஅள்ளி, பத்திரஅள்ளி, பெரும்பாலை, சின்னம்பள்ளி உள்ளிட்ட பெரும்பான்மையான ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு, சாலை வசதி, தெருவிளக்கு அமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பேச்சுவார்த்தை

மஞ்சாரஅள்ளி ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் இளைஞர்கள் ஊராட்சியின் வரவு செலவு மற்றும் திட்டப்பணிகள் குறித்து கேள்வி எழுப்பினர். இதனால் கூட்டம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவண்ணன் நேரில் வந்து இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பாலக்கோடு ஒன்றியம் புலிகரை ஊராட்சி கிராம சபை கூட்டம் ஊராட்சி சேவை மைய வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் கவுரி தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாக்ரடீஸ், கமலா ஊராட்சி செயலாளர் சிவன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தனர்.

கோவில்களில் சமபந்தி விருந்து

சுதந்திர தினவிழாவையொட்டி தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனசாமி கோவில், குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவில், அதியமான்கோட்டை சென்றாய பெருமாள் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், மொரப்பூர் சிங்காரத்தோப்பு முனியப்பன் கோவில், இருமத்தூர் கொல்லாபுரி அம்மன் கோவில், பாலக்கோடு புதூர் மாரியம்மன் கோவில் ஆகிய 7 கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனசாமி கோவிலில் நடந்த சிறப்பு வழிபாடு மற்றும் விருந்தில் கலெக்டர் மலர்விழி கலந்து கொண்டு பொதுமக்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். இந்த நிகழ்ச்சியில் இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், கோவில் செயல் அலுவலர் சிவக்குமார், தாசில்தார் சுகுமார், அறநிலையத்துறை அலுவலர் ராஜேஸ்வரி உள்பட பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story