நெய்வேலியில் சுதந்திர தின விழா, சூரியஒளி மின்சக்தி மூலம் மணிக்கு 10 லட்சம் யூனிட் மின் உற்பத்தி - என்.எல்.சி. தலைவர் ராக்கேஷ்குமார் பேச்சு


நெய்வேலியில் சுதந்திர தின விழா, சூரியஒளி மின்சக்தி மூலம் மணிக்கு 10 லட்சம் யூனிட் மின் உற்பத்தி - என்.எல்.சி. தலைவர் ராக்கேஷ்குமார் பேச்சு
x
தினத்தந்தி 15 Aug 2019 10:45 PM GMT (Updated: 15 Aug 2019 10:56 PM GMT)

சூரியஒளி மின்சக்தி மூலம் மணிக்கு 10 லட்சம் யூனிட் மின் உற்பத்தி செய்யப்படுவதாக நெய்வேலியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் என்.எல்.சி. தலைவர் ராக்கேஷ்குமார் பேசினார்.

நெய்வேலி,

நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு நிறுவனத்தின் தலைவர் ராக்கேஷ்குமார் தலைமை தாங்கி, நகர நிர்வாக அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தார். இதனை தொடர்ந்து பாரதி விளையாட்டரங்கில் தலைவர் ராக்கேஷ்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

5 ஆண்டுகளுக்கு முன்பு என்.எல்.சி.யில் 3,240 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில் 60 சதவீதம் வளர்ச்சி அடைந்து அனல்மின் சக்தி மற்றும் புதுபிக்கவல்ல ஆற்றல் உள்பட 5,193 மெகாவாட்டாக மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. ஓராண்டில் ரூ.7,208 கோடிக்கும் அதிகமாக புதிய திட்டங்களில் முதலீடு செய்து இந்நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

இந்திய அரசின் தேசிய சூரியஒளி மின்திட்டம் மற்றும் பசுமை மின்சக்தி முயற்சிகளுக்கு வலுசேர்க்கும் வகையில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் வருகிற 2025-ம் ஆண்டிற்குள் 4,251 மெகாவாட் அளவிற்கு புதுப்பிக்கவல்ல எரிசக்தித்துறையில் மின்திட்டங்களை நிறைவேற்ற இலக்குகளை நிர்ணயித்துள்ளது. இந்நிறுவனம் மணிக்கு 10 லட்சம் யூனிட் சூரியஒளி மின்சக்தி உற்பத்தி செய்யும் அளவினை எட்டியுள்ளது.

நெய்வேலி புதிய அனல்மின் திட்டத்தின் 500 மெகாவாட் திறன்கொண்ட முதல் மின்உற்பத்தி பிரிவில் கடந்த 28.03.2019 அன்று சோதனை முறையில் மின்உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது. அப்பிரிவு முழுஉற்பத்தி திறனுடன் இயங்குவதற்கான பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதேபோல் 2-ம் மின்உற்பத்திப்பிரிவில் கடந்த 30.05.2019 அன்று நீராவி உற்பத்தி செய்யும் சோதனை நடைபெற்றது.

இந்த மின்நிலையத்தின் முதல் மின்உற்பத்தி பிரிவினை அடுத்த மாத (செப்டம்பர்) இறுதிக்குள் முழுஉற்பத்தி அளவுடன் இயக்குவதற்கும், 2-வது உற்பத்திப்பிரிவானது நடப்பு நிதியாண்டிற்குள் முழுஉற்பத்தி அளவினை எட்டவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. என்.எல்.சி. இந்தியா அனல்மின் நிலையங்களின் மின்சக்தியானது ஒரு யூனிட்டுக்கு ரூ.4-க்கும், சூரியஒளி மின்சக்தியானது ஒரு யூனிட்டுக்கு ரூ.3-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் என்.எல்.சி நிறுவனத்தில் நீண்ட நாட்களாக நெய்வேலி பொருள் மேலாண்மை வளாகத்தில் சிறப்புநிலை உதவியாளராக பணிபுரிந்து வரும் வை ஜெயந்தி மாலா, அவரது கணவர் செல்வராஜூடன் கவுரவிக்கப்பட்டார். மேலும் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

விழாவில் ராக்கேஷ்குமாரின் மனைவி கஞ்சன் கம்ரா, மனிதவளத்துறை இயக்குனர் விக்ரமன், அவரது மனைவி சாந்தி, திட்டம் மற்றும் செயலாக்கத்துறை இயக்குனர் நாதெள்ள நாக மகேஷ்வர் ராவ், அவரது மனைவி அருணாராவ், சுரங்கத்துறை இயக்குனர் பிரபாகர் சவுக்கி, அவரது மனைவி புஷ்பலதா, மின்துறை இயக்குனர் ஷாஜி ஜாண், அவரது மனைவி ஆன்சிஜாண் மற்றும் உயர் அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Next Story