தனியார் மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் எம்.எல்.ஏ. உள்பட 102 பேர் கைது


தனியார் மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் எம்.எல்.ஏ. உள்பட 102 பேர் கைது
x
தினத்தந்தி 19 Aug 2019 4:30 AM IST (Updated: 19 Aug 2019 2:38 AM IST)
t-max-icont-min-icon

கொல்லங்கோடு அருகே தனியார் மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. உள்பட 102 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொல்லங்கோடு,

கொல்லங்கோடு அருகே வெங்குளம் கரை பகுதியில் ஒருவர் புதிதாக கட்டிடம் கட்டி அதில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் தனியார் மதுபானக்கடை நடத்த உரிமம் பெற்றுள்ளார். அரசு அனுமதி அளித்ததின் பேரில் நேற்று காலை 11 மணிக்கு மதுக்கடையை திறக்க திட்டமிட்டிருந்தார். இதுபற்றிய தகவல் அப்பகுதி முழுவதும் காட்டுதீ போல் பரவியது.

இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் புதிதாக திறக்க இருந்த மதுக்கடைக்கு செல்லும் சாலையில் திரண்டனர்.

மறியல் போராட்டம்

இதனை அறிந்த ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.வும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்தார். பின்னர், அவர் தலைமையில் பொதுமக்கள் வெங்குளம் கரை சந்திப்பில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதேபோல், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பால்ராஜ், அருளானந்தன், தி.மு.க.வை சேர்ந்த மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் அப்துல் ரஹ்மான், மோகன், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ரூபன், மெஜில், தே.மு.தி.க. மாவட்ட பொறுப்பாளர் ஐடன் சோனி, கொல்லங்கோடு பேரூர் செயலாளர் சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே போராட்டம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் மதுக்கடை உரிமையாளர் 11 மணியளவில் கடையை திறந்து மது பாட்டில்களை விற்பனை செய்தார். இதனால், மேலும் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலையில் அமர்ந்தவாறு கடையை மூடக்கோரி கோஷங்களை எழுப்பினர்.

102 பேர் கைது

பின்னர் கொல்லங்கோடு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன்றார். ஆனால், அவர்கள் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்தனர். போராட்டம் நடந்த பகுதி கேரளா-தமிழக எல்லை இணைப்பு சாலை என்பதால் வாகனங்கள் இருபுறங்களிலும் அணிவகுத்து நின்றது.

அதைத்தொடர்ந்து போலீசார் வாகனங்களை மாற்று வழியில் அனுப்பி வைத்தனர். பேச்சுவார்த்தைக்கு உடன்படாததாலும், நேரம் செல்லச்செல்ல போராட்டம் தீவிரம் அடைந்ததாலும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. உள்பட 102 பேரை கைது செய்தனர். இதில் 32 பெண்கள் அடங்குவர்.

கைதான அனைவரையும் ஒரு மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். மண்டபத்தின் முன் இறங்கிய அவர்கள் கதவு பூட்டப்பட்டு இருந்ததால் அங்குள்ள சாலையில் மீண்டும் மறியலில் ஈடுபட்டனர். உடனே, போலீசார் மண்டப கதவின் பூட்டை உடைத்து அவர்களை உள்ளே தங்க வைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கூறும் போது, மதுக்கடையை திறக்க கூடாது என இன்று (திங்கட்கிழமை) மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க உள்ளதாக கூறினார்.

இந்த சம்பவம் கொல்லங்கோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story