சங்ககிரி போலீஸ் நிலையம் அருகே, குழந்தைகளுடன் விஷம்குடித்து மயங்கி கிடந்த தொழிலாளி - ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் மனமுடைந்த தொழிலாளி குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் குடித்து விட்டு சங்ககிரி போலீஸ் நிலையம் அருகே மயங்கி கிடந்தார். ஆஸ்பத்திரியில் 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த பரபரப்பு சம்பவம் பற்றி கூறப்படுவதாவது:-
சங்ககிரி,
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே ஊஞ்சக்கொரை குண்டாச்சிகாடு பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 38). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி (30). இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகளும், 9 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
முத்துக்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனை மனைவி லட்சுமி கண்டித்துள்ளார். ஆனால் முத்துக்குமார் குடிப்பழக்கத்தை நிறுத்தவில்லை. குடும்ப பிரச்சினையும் இருந்து வந்துள்ளது. இதனால் லட்சுமி கோபித்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்தநிலையில் முத்துக்குமார் சங்ககிரி அனைத்து மகளிர் போலீசில், தனது மனைவியை குடும்பம் நடத்த சேர்த்து வைக்க வேண்டுமாறு புகார் செய்ய வந்தார். அதன்பேரில் போலீசார், லட்சுமியை போலீஸ் நிலையம் வர அழைத்துள்ளனர். இதையடுத்து நேற்று மதியம் 1.30 மணியளவில் சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தனது குழந்தைகளுடன் வந்துள்ளார்.
மனைவி லட்சுமி சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன்பு நின்றிருந்தார். அவரை முத்துக்குமார் பார்த்து தன்னுடன் குடும்பம் நடத்த வர அழைத்ததாக தெரிகிறது. ஆனால் லட்சுமி மறுத்ததாக தெரிகிறது. இதனால் தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு அங்குள்ள ஒரு தியேட்டர் அருகே சென்றார். அங்கு முத்துக்குமார் குழந்தைகளுக்கு விஷம் வாங்கி குடிக்க கொடுத்து விட்டு தானும் குடித்துள்ளார். பின்னர் மீண்டும் சங்ககிரி மகளிர் போலீஸ் நிலையம் அருகே வந்து அவர்கள் ரோட்டின் ஓரமாக கீழே மயங்கி கிடந்தனர்.
இதை பார்த்ததும் அவரை சங்ககிரி மகளிர் போலீசார் உடனடியாக ஆட்டோவை வரவழைத்து குழந்தைகளுடன் முத்துக்குமாரை ஏற்றி சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேரும் சிகிச்சை பெற்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதனால் சங்ககிரி மகளிர் போலீஸ் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story