சங்கராபுரம் அருகே பரபரப்பு, விநாயகர் சிலை உடைப்பு - போலீசார் விசாரணை
சங்கராபுரம் அருகே விநாயகர் சிலை உடைக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே மயிலாம்பாறையில் இருந்து நெடுமானூர் செல்லும் சாலையில் பழமை வாய்ந்த காட்டுபிள்ளையார் என்கிற வழித்துணை விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் செவ்வாய், வெள்ளி மற்றும் விசேஷ நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் வழித்துணை விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்துவதற்காக நேற்று முன்தினம் மாலை மயிலாம்பாறை மற்றும் நெடுமானூர் பகுதி மக்கள் கோவிலுக்கு சென்றனர்.
அப்போது கோவிலில் இருந்த விநாயகர் சிலை உடைக்கப்பட்டு கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடைந்து கிடந்த விநாயகர் சிலையை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கிராமத்தின் எல்லையில் உள்ள வழித்துணை விநாயகர் சிலையை அந்த வழியாக சென்ற மர்மநபர்கள் யாரோ கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடைத்து சென்றது தெரியவந்தது.
தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விநாயகர் சிலையை உடைத்த மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story