வானவில் : அட்மோஸ் வாக்குவம் பம்ப்
காற்று புகாமல் இருக்கச் செய்ய உதவுவதுதான் வாக்குவம் பம்ப்.
பொதுவாக வீடுகளில் வாங்கி வைக்கும் காய்கறிகள் பிரிட்ஜில் வைத்தாலும் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்காது. காரணம் குளிர் சாதனப் பெட்டியில் நிலவும் ஈரப்பதம் குறிப்பிட்ட நாள்களுக்குப் பிறகு காய்கறிகள், பழங்கள் கெடுவதற்கு வழியேற்படுத்திவிடும். இதற்குப் பதிலாக காற்றுப் புகாத பைகள் அல்லது பிளாஸ்டிக் கன்டெய்னர்களில் வைத்திருக்கும் உணவுப் பொருள்கள் நீண்ட காலம் கெடாமல் இருக்கும். இவ்விதம் காற்று புகாமல் இருக்கச் செய்ய உதவுவதுதான் வாக்குவம் பம்ப்.
இதை அட்மோஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது. பொதுவாக தற்போது சந்தையில் புழக்கத்தில் உள்ள கருவிகள் அனைத்துமே அளவில் பெரியவை. இடத்தை அடைத்துக் கொள்ளும். ஆனால் அட்மோஸ் வாக்குவம் கருவி கையடக்கமானது. இதன் மூலம் பழங்கள், காய்கறிகள் வைக்கும் கவர்களினுள் உள்ள காற்றை முற்றிலுமாக உறிஞ்சி விடலாம். இதனால் அவை நீண்ட காலம் கெடாமல் இருக்கும். காற்று முற்றிலுமாக உறிஞ்சப்பட்டு விடுவதால் பாக்டீரியா வளர வழி கிடையாது. இதனால் உணவுப் பொருள்கள் நீண்ட காலம் கெடாமல் இருக்கும்.
இதேபோல வெளியூர் பயணத்தின்போது உடைகளை எடுத்து வைப்பது மிகப் பெரும் சவால். இதைப் பயன்படுத்தி ஆடைகள் மீது உள்ள காற்றை நீக்கிவிட்டால் அவை மிகக்குறைவான இடத்தையே ஆக்கிரமிக்கும். இதனால் எளிதில் துணிகள், பெட்ஷீட், போர்வைகளையும் எடுத்துச் செல்ல முடியும். வழக்கமாக ஒரு சூட்கேஸில் எடுத்துச் செல்லும் பொருள்களைக் காட்டிலும் நான்கு மடங்கு கூடுதலாக துணிகளை எடுத்துச் செல்ல இது உதவும்.
இது வயர்லெஸ் முறையில் செயல்படக் கூடியது. இது பேட்டரியில் இயங்கக் கூடியது. இந்த பேட்டரியை ரீசார்ஜ் செய்யலாம். காற்றை மட்டும் உறிஞ்சும் வேலையை இது செய்வதில்லை. பேஸ்பால், கால்பந்து, கார் டயர் போன்றவற்றுக்கு காற்று நிரப்ப இது பயன்படுகிறது. கையடக்கமான இந்தக் கருவி மிகவும் உபயோகமானதே. இதன் விலை சுமார் ரூ.2000.
Related Tags :
Next Story