எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் விசாரணை அமைப்புகள்; மத்திய அரசு மீது குமாரசாமி குற்றச்சாட்டு


எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் விசாரணை அமைப்புகள்; மத்திய அரசு மீது குமாரசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 4 Sep 2019 11:30 PM GMT (Updated: 4 Sep 2019 5:50 PM GMT)

எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக விசாரணை அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன என்று மத்திய அரசு மீது குற்றம்சாட்டிய குமாரசாமி குதிரை பேரம் குறித்து வருமானவரி சோதனை நடத்தாதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பெங்களூரு, 

முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பா.ஜனதாவுக்கு எதிராக செயல்படும் எதிர்க்கட்சிகளின் தலைவர்களை மத்திய அரசு தொல்லை கொடுக்கிறது. மத்திய ஊழல் கண்காணிப்பு தலைவராக இருந்த விட்டல் என்பவர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதில் மத்திய அரசுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு விசாரணை அமைப்புகள் மூலம் தொல்லை கொடுக்கப்படுவதாக கூறியிருக்கிறார்.

எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக மத்திய அரசு விசாரணை அமைப்புகளை பயன்படுத்துகிறது. 2008-ம் ஆண்டு எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்று ஆட்சி நடத்தினார். அப்போது அவர் தனது ஆட்சியை காப்பாற்ற யார்-யாருக்கு எவ்வளவு பணம் கொடுத்தார்?. எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கினார். எங்கள் கட்சி எம்.எல்.ஏ. ஒருவரை விலைக்கு வாங்க எடியூரப்பா குதிரை பேரம் நடத்தினார்.

அது தொடர்பான ஆடியோ உரையாடலை நான் வெளியிட்டேன். இந்த விஷயத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தாதது ஏன்?. அமலாக்கத்துறையினர் எங்கே போனார்கள்?. எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக விசாரணை அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. ஏதாவது தவறு நடந்திருந்தால், அதற்குரிய அபராதத்தை செலுத்த உத்தரவிட வேண்டும். அதைவிடுத்து கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

17 எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதாவினர் விலைக்கு வாங்கினர். அந்த ஊழல் பணம் எங்கிருந்து வந்தது?. டி.கே.சிவக்குமார் கைது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறியிருக்கிறார். அவர் ஒன்றுமே தெரியாதது போல் பேசுகிறார். அவரை கைது செய்ய சொல்லி அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் உத்தரவிட்டது யார்?.

கர்நாடகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண உதவிகள் கிடைக்காமல் தவிக்கிறார்கள். ஆனால் எடியூரப்பா மும்பைக்கு சென்று, விலைக்கு வாங்கிய 17 எம்.எல்.ஏ.க்களுக்கு பாதுகாப்பு கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துவிட்டு வந்துள்ளார். மகதாயி பிரச்சினை குறித்து பேச அவர் மும்பைக்கு செல்லவில்லை. தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணையை கண்டு எனக்கு எந்த பயமும் இல்லை. நான் பரிசுத்தமானவன். எத்தகையை விசாரணையையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.

தனியார் நகைக்கடை பொதுமக்களின் நிதியை மோசடி செய்தது தொடர்பாக வெளிநாட்டில் தங்கியிருந்த அதன் உரிமையாளரை கர்நாடக சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் இந்தியாவுக்கு வரவழைத்தனர். ஆனால் மத்திய அரசின் விசாரணை அமைப்பு அதிகாரிகள் அவரை கைது செய்து அழைத்து சென்றனர்.

கூட்டணி ஆட்சி காலத்தில் நான் எந்த தவறும் செய்யவில்லை. ஏதாவது தவறுகள் நடந்திருந்தால் அதற்குரிய ஆதாரங்களை வெளியிட வேண்டும். தற்போது இந்த அரசு, அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதில் கோடிக்கணக்கான ரூபாய் பேரம் நடக்கிறது.

இவ்வாறு குமாரசாமி கூறினார். 

Next Story