அரசும், மாநகராட்சியும் தோல்வி: மழை வெள்ளத்தில் இருந்து மக்களே தங்களை காப்பாற்றி கொள்ள வேண்டும்; எதிர்க்கட்சி தலைவர் கூறுகிறார்
அரசும், மாநகராட்சியும் தோல்வி அடைந்து விட்டதால் மழை வெள்ளத்தில் இருந்து மக்களே தங்களை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் விஜய் வடேடிவார் கூறினார்.
மும்பை,
மும்பை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியில் நேற்று கனமழை கொட்டித்தீர்த்தது. இடைவிடாது பெய்த கனமழையால் மும்பை நகரமே வெள்ளக்காடாக மாறியது. இதனால் மக்கள் பரிதவித்து வருகின்றனர். இந்த நிலையில் மழை வெள்ள பாதிப்பு குறித்து எதிர்க்கட்சிகள் மாநில அரசு மற்றும் மும்பை மாநகராட்சியை கடுமையாக விமர்சித்துள்ளன. இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் (காங்கிரஸ்) விஜய் வடேடிவார் கூறியதாவது:-
மழை வெள்ள பாதிப்பில் சிக்கி தவிக்கும் மக்களை பாதுகாக்க அரசும், மும்பை மாநகராட்சியும் தோல்வி அடைந்து விட்டன. பேரிடர் மேலாண்மை நிர்வாகம் என்பது இல்லவே இல்லை. அது மக்களை காக்க உதவவில்லை. எனவே மும்பை வாசிகள் இதுபோன்ற பேரிடர்களில் இருந்து தங்களை, தாங்களே தற்காத்துக்கொள்ளும் முயற்சிகளை எடுக்கவேண்டும். அரசாங்கமோ அல்லது மாநகராட்சியோ தங்களை காக்க நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கொண்டு இருக்கக்கூடாது.
முக்கியமாக பழமையான மற்றும் ஆபத்தான கட்டிடங்களில் வசிப்பவர்கள் இடைவிடாத மழையைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதேபோல் மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் (தேசியவாத காங்கிரஸ்) தனஞ்செய் முண்டே வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “ குறைந்தபட்சம் இந்த முறையாவது, அரசு நிர்வாகம் திட்டமிட்ட முறையில் மக்களுக்கு உதவ வேண்டும்“ என்றார்.
Related Tags :
Next Story