பழனி அருகே, மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல் - தம்பதி துடிதுடித்து சாவு


பழனி அருகே, மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல் - தம்பதி துடிதுடித்து சாவு
x
தினத்தந்தி 4 Sep 2019 11:00 PM GMT (Updated: 4 Sep 2019 8:08 PM GMT)

பழனி அருகே மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே தம்பதி பலியாகினர். இதில் ஆத்திரமடைந்த உறவினர்கள் பஸ்சை தீவைத்து கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சத்திரப்பட்டி, 

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள சிந்தலவாடம்பட்டி மடத்துதோட்டம் பகுதியை சேர்ந்தவர் துர்க்கையப்பன் (வயது 37). விவசாயி. இவருடைய மனைவி விஜயலட்சுமி (30). நேற்று ராமபட்டினம்புதூரில் துர்க்கையப்பனின் உறவினர் ஒருவர் இறந்துவிட்டார். இதையடுத்து துர்க்கையப்பன், தனது மனைவி மற்றும் மாமியார் அங்காத்தாள் (50) ஆகியோருடன் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மடத்துதோட்டத்தில் இருந்து ராமபட்டினம்புதூர் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

பழனி-திண்டுக்கல் சாலையில் சத்திரப்பட்டியை அடுத்த ராமபட்டினம்புதூர் பிரிவு பகுதியில் சென்றபோது, எதிரே திண்டுக்கல்லில் இருந்து பழனி நோக்கி வந்த தனியார் பஸ் அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார்சைக்கிளில் சென்ற துர்க்கையப்பன் உள்பட 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த துர்க்கையப்பன், விஜயலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர். அங்காத்தாள் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

இதற்கிடையே மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேகத்தில் பஸ் சாலையோர மரத்தில் மோதி நின்றது. நல்லவேளையாக பஸ்சில் வந்த வர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இதையடுத்து பஸ்சில் இருந்து அனைவரும் கீழே இறங்கினர். இதற்கிடையே பஸ் டிரைவரான திண்டுக்கல் அழகுபட்டியை சேர்ந்த ராஜா (35), கண்டக்டரான கன்னிவாடியை சேர்ந்த திருப்பதி (35) ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இந்த பயங்கர விபத்தை கண்டதும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக சத்திரப்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதனைத்தொடர்ந்து சத்திரப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயமடைந்த அங்காத்தாளை மீட்டு ஆம்புலன்சில் சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் துர்க்கையப்பனின் உறவினர்கள் சிந்தலவாடம்பட்டிக்கு திரண்டு வந்தனர். பின்னர் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் பலியானதால், ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தனியார் பஸ்சுக்கு தீ வைத்தனர். இதில் பஸ் மளமளவென தீப்பற்றி எரிந்தது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.

இதுகுறித்து பழனி, ஒட்டன்சத்திரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து 3 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து பஸ்சில் எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் உடனடியாக அணைக்க முடியவில்லை. பின்னர் ஒரு வழியாக நீண்ட நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. ஆனால் பஸ் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாக காட்சியளித்தது.

இதற்கிடையே விபத்து குறித்து தகவலறிந்ததும் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் பலியான துர்க்கையப்பன், விஜயலட்சுமி ஆகியோர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் இறந்த தம்பதியினருக்கு அபிபிரனேஷ் (10) என்ற மகனும், துர்க்காதேவி (8) என்ற மகளும் உள்ளனர்.

Next Story