தங்கம் என்பது இனி கனவாகி விடும் - விலை உயர்வு குறித்து பெண்கள் கருத்து
தங்கம் என்பது இனி ஏழை பெண்களுக்கு கனவாகி விடும், என்று விலை உயர்வு குறித்து பெண்கள் கருத்து தெரிவித்தனர்.
பெரம்பலூர்,
தங்கம் ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்தை தாண்டி விட்டது. இந்த விலை உயர்வு குறித்து பெரம்பலூர்-அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் சிலரிடம் கருத்து கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
பெரம்பலூர் மதரசா சாலையை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை சாவித்ரி ஆனந்த நடேசன்: கால்நூற்றாண்டுக்கு முன்பு கிராமிற்கு ரூ.400 -க்கு விற்ற தங்கம் இதுவரை இல்லாத வகையில் உயர்ந்து ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்தை தொட்டு விட்டது. தமிழர்களிடத்தில் நகைமோகம் அதிகம். திருமணம் மற்றும் விசேஷ வைபவங்களுக்கு தங்கம் வாங்குவது அன்றாட தேவைகளுள் ஒன்றாகிவிட்டது. இந்நிலை தொடர்ந்தால் பெண் குழந்தைகளை பெற்றவர்கள் அதிகம் சிரமப்படுவார்கள்.
குரும்பலூரை சேர்ந்த சுமதி: இனிமேல் தங்கம் பணக்காரர்களின் பொருளாகவும், ஏழை பெண்களுக்கு கனவாகி விடும்.
ஜெயங்கொண்டத்தை சேர்ந்த பல் டாக்டர் பரமேஸ்வரி: தங்கம் விலை உயர்ந்துகொண்டே செல்வதால், நடுத்தர மக்களால் தங்கத்தை வாங்கமுடியாத நிலை ஏற்படும்.
ஜெயங்கொண்டத்தை சேர்ந்த குடும்ப தலைவி கீதா: கடந்த சில மாதங்களுக்கு முன்புஎனது மூத்த மகளை திருமணம் செய்து கொடுத்தேன். இன்னும் எனக்கு திருமண வயதில் 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு இனிமேல் தங்கம் வாங்கி திருமணத்தை எப்படி நடத்தப்போகிறேன் என்று தெரியவில்லை.
அரியலூர் மாவட்டம் திருமழபாடியை சேர்ந்த குடும்ப தலைவி சுசீலா: இந்த விலை உயர்வால், இனிவரும் காலங்களில் மாதம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குபவர்களால் மட்டுமே தங்கம் வாங்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. எங்களைப் போன்ற நடுத்தர மக்கள் மற்றும் அடித்தட்டு மக்கள் தங்கம் வாங்குவதை குறித்து நினைக்கவே கூடாது போல. எங்களைப்போன்ற மக்களின் பெண்குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் போது சாதாரணமாக 3 சவரன் தங்கத்திற்கே ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் வந்தால் நாங்கள் எப்படி குடும்பம் நடத்துவது. தங்கம் விலை கிடுகிடு உயர்வை தடுக்க மாநில அரசும் கண்டு கொள்ளவில்லை, மத்திய அரசும் கண்டு கொள்வதில்லை என்றார்.
Related Tags :
Next Story