மாவட்டத்தில், 67 பெரிய பாசனக்குளங்களை தூர்வார ரூ.3¼ கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்


மாவட்டத்தில், 67 பெரிய பாசனக்குளங்களை தூர்வார ரூ.3¼ கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்
x
தினத்தந்தி 4 Sep 2019 11:00 PM GMT (Updated: 4 Sep 2019 8:09 PM GMT)

கரூர் மாவட்டத்தில் 67 பெரிய பாசனக் குளங்களை தூர்வார ரூ.3¼ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறினார்.

கரூர், 

கரூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்வழித்தடங்கள் முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின்கீழ் தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், ஊரக வளர்ச்சி முகமையின் கட்டுப்பாட்டில் உள்ள கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தண்ணீர்பந்தல் பாளையம் குளம், கருப்பம்பாளையம் குளம் மற்றும் பஞ்சமாதேவி சித்தக்காட்டூர் குளம் ஆகிய குளங்களை தூர்வாரும் பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை பொதுப் பணித்துறையின் அமராவதி, காவிரி மற்றும் அரியாறு ஆகிய மூன்று வடிநிலக்கோட்டங்களின் கீழ் ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், வாய்க்கால்கள் இருக்கிறது. இதில் அமராவதி வடிநிலக்கோட்டத்திற்குட்பட்ட பள்ளபாளையம் வாய்க்கால், கோயம்பள்ளி சோமூர் வாய்க்கால், திருமாநிலையூர் வாய்க்கால், மாயனூர் மணவாசி வாய்க்கால், சின்ன தாராபுரம் வாய்க்கால் மற்றும் நஞ்சைகாளக்குறிச்சி வாய்க்கால் என 6 பகுதிகளை தூர்வாரி, கரைகளை பலப் படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோல, காவிரி வடி நிலக்கோட்டத்திற்குட்பட்ட பாப்புலர் முதலியார் வாய்க்கால், கட்டளை வாய்க்கால், புதுகட்டளை வாய்க்கால், மகாதானபுரம் வாய்க்கால், படுகை மற்றும் சித்தலவாய் வாய்க்கால்களும், அரியூர் வடிநிலக்கோட்டத்திற்குட்பட்ட கடவூர் வட்டத்தில் உள்ள தென்னிலை நீர்த்தேக்கம், மாவத்தூர் குளம், பன்னப்பட்டி குளம், கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் தாதம்பட்டி நீர்த்தேக்கம், பாப்பாக்காப்பட்டி குளம், குளித்தலை வட்டத்தில் மேலவெளியூர் நீர்த்தேக்கம், கழுகூர் குளம் உள்ளிட்ட நீர்வழித்தடங்களும் இந்த ஆண்டுக்கான குடிமராமத்துப் பணிகளில் தேர்வுசெய்யப்பட்டு பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த குடிமராமத்து பணிகளுக்காக நடப்பாண்டில் கரூர் மாவட்டத்தில் 33 பணிகளுக்கு ரூ.6 கோடியே 87 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

இதில் தூர்வாரும் பணிகள் நிறைவுற்றதால் மாயனூரில் இருந்து கட்டளை மேட்டு வாய்க்கால் மற்றும் புது கட்டளை மேட்டு வாய்க்கால் ஆகிய வாய்க்கால்களில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு, கடைமடை வரை தண்ணீர் சென்று சேர்ந்துள்ளது. இது விவசாயிகளுக்கு பயன்தரும் வகையில் அமைந்துள்ளது. 1994-ம் ஆண்டில் தூர் வாரப்பட்ட வாய்க்கால்கள் எல்லாம், அதற்குப்பின் தற்போதுதான் தூர்வாரப்பட்டு தண்ணீர் செல்வதை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கின்றது என்று விவசாயிகள் என்னிடம் தெரிவிக்கும் போது, பெருமையாக இருக்கிறது. அதுமட்டுமல்லாது, கரூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் கட்டுப்பாட்டில் உள்ள 67 பெரிய பாசன குளங்களை தூர்வார ரூ.3 கோடியே 35 லட்சம் நிதியும், 267 சிறு குளங்களை தூர்வார ரூ.2 கோடியே 67 லட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இனிவரும் காலங்களில் நாம் அனை வரும் மழை நீரை சேமிக்க வேண்டும். நிலத்தடி நீரை செறிவூட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் கவிதா, கரூர் வருவாய் கோட்டாட்சியர் சந்தியா, கரூர் வட்டார வளர்ச்சி அதிகாரி மனோகர், மண்மங்கலம் வட்டாட்சியர் ரவிக்குமார், கரூர் நகர கூட்டுறவு வங்கி தலைவர் திருவிகா, கரூர் ஒன்றிய செயலாளர் என்ஜினீயர் கமலகண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story