தூத்துக்குடி அருகே கொலை வழக்கில் பிடிபட்ட 2 பேரை தண்டனை கைதியாக வைக்க உதவி கலெக்டர் உத்தரவு


தூத்துக்குடி அருகே கொலை வழக்கில் பிடிபட்ட 2 பேரை தண்டனை கைதியாக வைக்க உதவி கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 4 Sep 2019 10:45 PM GMT (Updated: 4 Sep 2019 8:25 PM GMT)

தூத்துக்குடி அருகே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேரை தண்டனை கைதியாக வைக்க உதவி கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள குலையன்கரிசலை சேர்ந்தவர் கருணாகரன். தி.மு.க. பிரமுகரான இவர் கடந்த 22-7-2019 அன்று வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குலையன்கரிசல் தெற்கு தெருவைச் சேர்ந்த இளையராஜா (வயது 28), நடுத்தெருவைச் சேர்ந்த ரமேஷ் (26) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் 2 பேர் மீதும் புதுக்கோட்டை போலீசார் கடந்த 18.3.2019, 1.7.2019 ஆகிய இரு நாட்களில் குற்ற விசாரணை நடைமுறைச் சட்டப்பிரிவு 107-ன்படி உட்கோட்ட நிர்வாக நடுவர் மற்றும் உதவி கலெக்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தினர். அதன்பிறகு உதவி கலெக்டர் கோர்ட்டில் 2 பேரிடமும் பொது அமைதியைக் காப்பதற்கு பிணைத்தொகை ரூ.5 ஆயிரம் மற்றும் பிணையப்பத்திரம் எழுதி பெறப்பட்டது. இந்த பிணையப்பத்திரம் பெறப்பட்ட 6 மாத காலத்துக்குள் தற்போது கொலை வழக்கில் ஈடுபட்டு உள்ளனர்.

இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் உத்தரவின் பேரில், புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக்கதிரவன் மேற்பார்வையில், புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் திருமலை, இளையராஜா, ரமேஷ் ஆகிய 2 பேர் மீதும், குற்ற விசாரணை நடைமுறைச்சட்டப்பிரிவு படி நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி உதவி கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பித்தார்.

அதன்பேரில் இளையராஜா, ரமேஷ் ஆகிய 2 பேர் மீதும் குற்றவியல் நடைமுறைச்சட்டம் 110-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதாவது நன்னடத்தை பத்திரம் பெறப்பட்டு நடைமுறையில் இருக்கும் தருவாயில், மீண்டும் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தி உள்ளனர்.

பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் உள்ளதாலும், பொது மக்களின் நலன்களை பாதுகாக்க வேண்டியும், எதிர்காலத்தில் இதுபோன்று சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் வகையிலும், கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக வைக்கப்பட்டுள்ள இளையராஜா, ரமேஷ் ஆகிய 2 பேரையும், குற்ற விசாரணை முறைச்சட்டம் 122(1)(பி)ன்படி இளையராஜாவை 17.9.2019 வரையும், ரமேசை 31.12.2019 வரையும் அல்லது சட்டப்படி வேறு நீதிமன்ற ஆணைப்படி விடுவிக்கப்படும் வரை தண்டனை கைதியாக ஜெயிலில் வைக்க உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத் சிங் கலோன் உத்தரவிட்டார்.

Next Story