கோவில்பட்டி அருகே, 12 கிராமங்களின் உள்ளாட்சி நிர்வாகத்தை தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்க வேண்டும்


கோவில்பட்டி அருகே, 12 கிராமங்களின் உள்ளாட்சி நிர்வாகத்தை தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்க வேண்டும்
x
தினத்தந்தி 4 Sep 2019 10:00 PM GMT (Updated: 4 Sep 2019 8:25 PM GMT)

கோவில்பட்டி அருகே உள்ள 12 வருவாய் கிராமங்களின் உள்ளாட்சி நிர்வாகத்தை தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என்று கோவில்பட்டி உதவி கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு வழங்கினர்.

கோவில்பட்டி,

தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் வக்கீல் ரங்கநாயகலு, மாநில பொதுச்செயலாளர் பரமேசுவரன், ஒன்றிய தலைவர் ஜெயராமன், இளைஞர் அணி செயலாளர் குருராஜ், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயணசாமி உள்ளிட்ட விவசாயிகள் நேற்று கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டர் விஜயாவிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் குறுவட்டத்தில் உள்ள 11 வருவாய் கிராமங்களும், கழுகுமலை குறுவட்டத்தில் உள்ள ஜமீன்தேவர்குளம் வருவாய் கிராமமும் நெல்லை மாவட்டம் குருவிகுளம் யூனியனில் உள்ளது. கோவில்பட்டி அருகில் உள்ள இந்த வருவாய் கிராமங்களை தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்க வேண்டி, அப்பகுதி மக்கள் சுமார் 40 ஆண்டுகளாக போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து கடந்த 1-5-2008 அன்று மேற்கண்ட 12 வருவாய் கிராமங்களும் தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. தொடர்ந்து அந்த வருவாய் கிராமங்களில் வருவாய்த்துறை, காவல் துறை, நெடுஞ்சாலைத்துறை, நீதிமன்றங்கள், பள்ளி கல்வித்துறை, உயர்கல்வித்துறை, சுகாதார துறை, சமூகநலத்துறை போன்றவை தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.

ஆனால் அந்த வருவாய் கிராமங்களின் பஞ்சாயத்துகள் மட்டும் குருவிகுளம் யூனியனிலே உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு தேவைகளுக்கு சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குருவிகுளம் யூனியன் அலுவலகத்துக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே கோவில்பட்டி அருகே உள்ள 12 வருவாய் கிராமங்களின் உள்ளாட்சி நிர்வாகத்தையும் தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மனுவை பெற்று கொண்ட உதவி கலெக்டர் விஜயா, இதுகுறித்து அரசுக்கு பரிந்துரைப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story