ராயப்பேட்டையில் வீட்டில் ஒரு டன் குட்கா போதைப்பொருள் பதுக்கிய 3 பேர் கைது


ராயப்பேட்டையில் வீட்டில் ஒரு டன் குட்கா போதைப்பொருள் பதுக்கிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 4 Sep 2019 10:45 PM GMT (Updated: 4 Sep 2019 10:38 PM GMT)

சென்னை ராயப்பேட்டையில் ஒரு டன் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த வடமாநில வாலிபர்கள் உள்பட 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அடையாறு,

சென்னை மயிலாப்பூர் துணை கமிஷனர் ஜெயலட்சுமி தலைமையிலான தனிப்படை போலீசார் மயிலாப்பூர், பட்டினம்பாக்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்ட விரோத நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தனிப்படை போலீசார் ராயப்பேட்டை வி.எம். தெருவில் உள்ள ஒரு வீட்டின் அருகே ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஒரு லோடு ஆட்டோவில் இருந்து பண்டல், பண்டலாக மூட்டைகள் அந்த வீட்டிற்குள் எடுத்துச் செல்லப்பட்டது.

இதைக்கண்ட தனிப்படை போலீசார் வீட்டிற்குள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தியதில், அங்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பொருட்கள் மூட்டை மூட்டையாக இருந்ததை கண்டுபிடித்தனர்.

3 பேர் கைது

இதைத்தொடர்ந்து, அங்கிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் பழைய வண்ணாரபேட்டையை சேர்ந்த மணி (வயது 60), ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த உபேந்திர சிங்(35) மற்றும் தர்மேந்திரகுமார் சிங் (27) என்பதும் தெரியவந்தது.

மேலும், இவர்கள் டெல்லி, பெங்களுரூவில் இருந்து ரெயில் மூலம் குட்காவை கடத்தி வந்து ராயப்பேட்டையில் ஒரு வாடகை வீட்டில் பதுக்கி மயிலாப்பூர், பட்டினம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து திருட்டுத்தனமாக விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து, அந்த வீட்டில் இருந்த ஒரு டன் குட்கா போதைப்பொருட்கள் அதனை கடத்த பயன்படுத்திய இரு சக்கர வாகனம், 2 சரக்கு ஆட்டோக்கள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். 3 பேரையும் கைது செய்த ராயப்பேட்டை போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story