திட்டக்குடியில் குடிநீர் கேட்டு, காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
திட்டக்குடியில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திட்டக்குடி,
திட்டக்குடி மேலவீதியில் பேரூராட்சி சார்பில் புதிதாக கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் மாலையில் கழிவுநீர் வாய்க்காலுக்காக பள்ளம்தோண்டியபோது, அந்த வீதிக்கு குடிநீர் செல்லக்கூடிய குழாய் உடைந்து, தண்ணீர் வீணாக சாலையில் ஓடியது.
இதனால் நேற்று முன்தினம் மாலையிலும், நேற்று காலையிலும் மேலவீதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுபற்றி பேரூராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலையில் காலி குடங்களுடன் திட்டக்குடி-அகரம் சீகூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் திட்டக்குடி தாசில்தார் புகழேந்தி மற்றும் திட்டக்குடி இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையிலான போலீசார், பேரூராட்சி முதுநிலை அலுவலர் சத்தியசீலன் ஆகியோர் விரைந்து வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், குடிநீர் குழாயை சரிசெய்து தருவதோடு மட்டுமின்றி கழிவுநீர் வாய்க்காலை தரமான முறையில் அமைத்து தர வேண்டும் என்றனர். அதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story