நடுக்கடலில் மாயமான ராமேசுவரம் மீனவர்களை மீட்க கோரி உறவினர்கள் 2-வது நாளாக போராட்டம்


நடுக்கடலில் மாயமான ராமேசுவரம் மீனவர்களை மீட்க கோரி உறவினர்கள் 2-வது நாளாக போராட்டம்
x
தினத்தந்தி 5 Sep 2019 10:30 PM GMT (Updated: 5 Sep 2019 7:42 PM GMT)

நடுக்கடலில் படகு கவிழ்ந்து மாயமான ராமேசுவரத்தை சேர்ந்த 4 மீனவர்களை மீட்க வலியுறுத்தி உறவினர்கள் 2-வது நாளாக நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் மீனவர்கள் 8 பேர் நேற்று முன்தினம் நடுக்கடலில் மாயமானது குறித்து தகவல் அறிந்ததும் மீனவர்களின் உறவினர்கள் நேற்று முன்தினம் ராமேசுவரம் மீன்துறை அலுவலகத்திற்கு திரண்டு சென்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து மண்டபம் கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே கமாண்டர் வெங்கடேசன் உத்தரவின் பேரில் கடலோர காவல்படை கப்பல்களும், ஹெலிகாப்டரும் அந்த பகுதிக்கு விரைந்து சென்று காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டன.

மல்லிபட்டினம் கடல் பகுதியில் இந்திய கடலோர காவல்படை கப்பல்கள், ஹெலிகாப்டர், ஹோவர் கிராப்ட் கப்பல் ஆகியவை தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. இந்த நிலையில் நேற்று நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த ரஞ்சித், முனீசுவரன், முனியசாமி, தரக்குடியான் ஆகிய 4 மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினர் மீட்டனர். அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

உமாகாந்த், இலங்கேசுவரன், மதன், காந்தகுமார் ஆகிய 4 மீனவர்களையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் அந்த மீனவர்களின் உறவினர்கள், குடும்பத்தினர் ராமேசுவரம் தாலுகா அலுவலகம் முன்பாக நேற்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதுதொடர்பாக காந்தகுமாரின் தந்தை ராமகிருஷ்ணன் கூறும் போது, “மாயமான மீனவர்களில் காந்த குமார் எனது 3-வது மகன். செல்லமாக வளர்த்தோம். அவன் படகு வாங்க சென்ற தகவல் எங்களுக்கு தெரியாது. மாயமான தகவல் தெரிந்த பிறகே அவன் படகு வாங்க உடன் சென்ற விவரம் தெரிந்தது. மாயமான அனைத்து மீனவர்களையும் மீட்க வேண்டும்” என்று கூறினார்.

ராமேசுவரத்தை சேர்ந்த காசிபாய் கூறுகையில், “4 மீனவர்களை மீட்ட இந்திய கடலோர காவல்படைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். மீட்கப்படாமல் உள்ள மற்ற மீனவர்களையும் மீட்க வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.

இதற்கிடையே நேற்று மாலை 6 மணி அளவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், தாசில்தார் அப்துல் ஜபார், போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், மீன்துறை உதவி இயக்குனர் யுவராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் அனைத்து மீனவர்களும் மீட்கப்படுவார்கள் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story