அரசியல் கட்சியினருடன் மோதலில் பணியிட மாற்றம்: விஷம் குடித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தற்கொலை முயற்சி


அரசியல் கட்சியினருடன் மோதலில் பணியிட மாற்றம்: விஷம் குடித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 6 Sept 2019 4:15 AM IST (Updated: 6 Sept 2019 1:55 AM IST)
t-max-icont-min-icon

அரசியல் கட்சியினருடன் ஏற்பட்ட மோதலில் பணியிடமாற்றம் செய்யப்பட்டதால் மனமுடைந்த இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

வேலூர், 

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக கனி (வயது 54) பணிபுரிந்து வந்தார். போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஒரு கடையை அகற்ற நடவடிக்கை எடுத்தது தொடர்பாக இவருக்கும் அரக்கோணத்தில் உள்ள அரசியல் கட்சியை சேர்ந்த சிலருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது.

அதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் கனி மீது போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு புகார் சென்றுள்ளது. அதன்பேரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் வேலூர் ஆயுதப்படைக்கு இன்ஸ்பெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் அரக்கோணம் போக்குவரத்து பிரிவில் பணியாற்றிய போலீசார் அனைவரும் மாற்றப்பட்டனர்.

ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டதால் இன்ஸ்பெக்டர் கனி மிகவும் விரக்தி அடைந்தார். தான் செய்யாத தப்புக்கு தண்டனை அளித்ததாக சக அதிகாரிகளிடம் புலம்பி உள்ளார். மேலும் அவர் விடுமுறை கேட்டும் கிடைக்கவில்லை. அதனால் மனமுடைந்து அவர் மருத்துவ விடுப்பில் சென்றார்.

இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் கனி வேலூரில் அவர் தங்கியிருந்த போலீஸ் குடியிருப்பில் உள்ள அறையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சகபோலீசார் அவரை மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story