சந்திரயான்-2 செயற்கைகோளை நிலவுக்கு அனுப்புவதில் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்துக்கு முக்கிய பங்கு - இயக்குனர் மூக்கையா பேட்டி


சந்திரயான்-2 செயற்கைகோளை நிலவுக்கு அனுப்புவதில் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்துக்கு முக்கிய பங்கு - இயக்குனர் மூக்கையா பேட்டி
x
தினத்தந்தி 5 Sep 2019 10:30 PM GMT (Updated: 5 Sep 2019 8:41 PM GMT)

சந்திரயான்-2 செயற்கைகோளை நிலவுக்கு அனுப்புவதில் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்துக்கு முக்கிய பங்கு உள்ளது என்று மையத்தின் இயக்குனர் மூக்கையா கூறி உள்ளார்.

நெல்லை,

இந்திய விண்வெளி அறிவியலின் தந்தை விக்ரம் சாராபாய் நூற்றாண்டு விழாவையொட்டி நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ உந்தும வளாகம் சார்பில் நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் என்ஜினீயரிங் கல்லூரியில் விண்வெளி கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த கண்காட்சி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இஸ்ரோ மைய இயக்குனர் டி.மூக்கையா தலைமை தாங்கினார். முன்னாள் இயக்குனர் ஆர்.வி.பெருமாள் கண்காட்சியை திறந்து வைத்தார். விழாவில் கண்காட்சி குழுதலைவர் லூயிஸ் சாம் டைட்டஸ் வரவேற்றார். கலெக்டர் ஷில்பா, எம்.பி.க்கள் முத்துகருப்பன், விஜிலா சத்யானந்த், லட்சுமணன் எம்.எல்.ஏ., ஸ்காட் குழும தலைவர் கிளிட்டஸ் பாபு, நிர்வாக இயக்குனர் அருண் பாபு, இஸ்ரோ முன்னாள் இயக்குனர் பெருமாள் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இந்த கண்காட்சியில் விண்வெளியில் செலுத்தப்படும் ராக்கெட், உதிரி பாகங்கள், செயற்கைகோள் மாதிரிகள் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் மாதிரி உடை, காட்சி படங்கள் ஆகியவை இடம்பெற்று உள்ளன. இவற்றை நெல்லை, தூத்துக்குடி, குமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.

இந்தியாவில் விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான், மங்கங்யான் செயற்கைகோள்கள் பற்றிய ஒளிச்சித்திரங்கள் திரையிடப்படுகிறது. இரவில் மாணவர்கள் தொலைநோக்கி மூலம் விண்வெளியை பார்வையிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

விழாவில் மகேந்திரகிரி இஸ்ரோ மைய இயக்குனர் மூக்கையா பேசியதாவது:-

தும்பாவில் ராக்கெட் ஏவுதளம் முதலில் தொடங்கிய போது மீனவர்கள் சிலர் அச்சத்தை தெரிவித்தனர். ஆனால் இப்போது விண்வெளியில் ஏவப்படும் இந்திய விண்கலம் அரபிக் கடலில் மீன்வளம் எங்கு உள்ளது? என்பதை தெளிவாக கண்டுபிடித்து தெரிவிக்கிறது. உலக அளவில் பல்வேறு சாதனைகளை நாம் அடைந்து வருகிறோம்.

இந்திய விண்வெளி விஞ்ஞானி விக்ரம் சாராபாய் நூற்றாண்டு விழா 100 இடங்களில் கொண்டாடப்படும். தமிழகத்தில் 11 இடங்களில் கொண்டாடப்படுகிறது. மகேந்திரகிரி இஸ்ரோ சார்பில் 6 இடங்களில் கொண்டாடப்படும். சந்திரயான்-2 சாதனைக்கு முன்னோடியாக விக்ரம் சாராபாயின் முயற்சிகளும் காரணமாக அமைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “இந்தியாவின் மகத்தான சாதனையான சந்திரயான் -2 நாளை அதிகாலை 1.30 மணி முதல் 2 மணிக்குள் நிலவில் இறங்குகிறது. அது இறங்கும் இடத்தில் இருந்து அதில் உள்ள ‘ரோவர்’ கருவி 100 மீட்டர் தூரம் வரை சென்று தனது ஆராய்ச்சி பணியை செய்து தகவல்களை நமக்கு அளிக்கும். இந்த பணி 14 நாட்கள் நடைபெறும். ½ கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள நிலவின் தன்மை, கனிம வள வாய்ப்பு ஆகியவை குறித்து ஆய்வுகளை தெரிவிக்கும். இதை தொடர்ந்து அடுத்த கட்ட நகர்வுக்கு நாம் செல்லலாம்.

சந்திரயான் -2 செயற்கை கோளை ஏற்றிச்சென்ற ராக்கெட்டில் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தின் பங்கு முக்கியமானது. அந்த ராக்கெட் குறித்த ஆராய்ச்சியையும், அதில் எரிபொருள் நிரப்பட்ட பணிகளிலும் முக்கிய பங்காற்றி உள்ளோம். அமெரிக்கா, சீனா, ரஷ்யா நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா விண்வெளியில் செயற்கை கோள்களை அனுப்புவதில் முன்னிலை பெற்று வருகிறது“ என்றார்.

Next Story