விருதுநகரில் கல்வி அதிகாரி வீட்டில் 38 பவுன் நகை கொள்ளை


விருதுநகரில் கல்வி அதிகாரி வீட்டில் 38 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 7 Sept 2019 4:00 AM IST (Updated: 7 Sept 2019 3:23 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் கல்வி அதிகாரி வீட்டு கதவை உடைத்து 38 பவுன் நகையை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விருதுநகர்,

விருதுநகர் என்.ஜி.ஓ. காலனி குறிஞ்சி தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 54). இவர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா, விருதுநகர் அருகே உள்ள நந்திரெட்டியபட்டி பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

நேற்று காலை இவர்கள் 2 பேரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டனர். மாலையில் பணி முடிந்து வீடு திரும்பிய ஆசிரியை மஞ்சுளா, வீட்டை திறந்து உள்ளே சென்றார். அப்போது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

மேலும் பீரோவில் இருந்த 38 பவுன் நகை, ரூ.83 ஆயிரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. இதுகுறித்து கணவர் கோவிந்தராஜிக்கு அவர் தகவல் தெரிவித்தார். அவர் உடனடியாக விருதுநகர் பாண்டியன் நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்களும் ஆய்வு மேற்கொண்டனர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் குடியிருப்பு பகுதியில் நடந்த கொள்ளை சம்பவம், அப்பகுதியில் உள்ளவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Next Story