தஞ்சை தற்காலிக பஸ் நிலையத்தில், டிரைவரை செருப்பால் அடித்த பெண் கைது - பஸ்களை நிறுத்தி டிரைவர்கள் போராட்டம்
தஞ்சை தற்காலிக பஸ் நிலையத்தில் டிரைவரை செருப்பால் அடித்த பெண் கைது செய்யப்பட்டார். டிரைவர்கள் பஸ்களை அப்படியே நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தஞ்சாவூர்,
தஞ்சை பழைய பஸ் நிலையம் மற்றும் திருவையாறு பஸ்கள் நிற்கும் பஸ் நிலையம், கரந்தை அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகே உள்ள தற்காலிக பஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. அதன்படி கடந்த ஒரு வாரமாக தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நேற்று பூண்டி மாதா கோவிலில் இருந்து காலை 10.25 மணிக்கு தஞ்சை தற்காலிக பஸ் நிலையத்துக்கு அரசு பஸ் வந்தது. பஸ்சை கதிர்வேல் என்பவர் ஓட்டி வந்தார். அந்த பஸ் மணக்கரம்பை வந்தபோது ஒரு பெண் பஸ்சில் ஏறி உள்ளார். அவர் கரந்தை அருகே வந்தபோது தற்காலிக பஸ் நிலையத்திற்கு வெளியே கரந்தை போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு தன்னை இறக்கி விடுமாறு கூறி உள்ளார்.
அதற்கு டிரைவர், அங்கு இறக்கி விட முடியாது. தற்காலிக பஸ் நிலையத்தில்தான் பஸ் நிற்கும் என கூறி உள்ளார். அதன்படி பஸ் பணிமனை அருகில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்திற்கு வந்து நின்றது.
அப்போது இது தொடர்பாக டிரைவருக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. டிரைவருக்கு ஆதரவாக பஸ் கண்டக்டரும் வந்துள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே கடுமையான வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண், செருப்பை கழற்றி டிரைவர் கதிர்வேலை தாக்கியதாக தெரிகிறது. இதில் அவருடைய பல் உடைந்து கீழே விழுந்தது. இந்த தகவல் பஸ் நிலையத்திற்கு வந்த மற்ற பஸ்களின் டிரைவர், கண்டக்டர்களுக்கு தெரிய வந்ததும் அவர்கள் பஸ்சை அப்படி, அப்படியே நிறுத்தி விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் அந்த பெண்ணை அருகில் இருந்த போக்குவரத்து கழக அறைக்கு அழைத்துச்சென்று அமர வைத்தனர். அப்போது அந்த பெண்ணும், டிரைவர்கள் தன்னை தாக்கியதாக கூறினார். இது குறித்து தஞ்சை மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன், சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அந்த பெண்ணை போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
விசாரணையில் அந்த பெண், மணக்கரம்பையை சேர்ந்த ராஜகுமாரி(வயது 47) என்பது தெரிய வந்தது. மேலும் இந்த சம்பவம் குறித்து டிரைவர் கதிர்வேல் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை கைது செய்து தஞ்சை மாஜிஸ்திரேட்டு முகமது அலி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவர் அந்த பெண்ணை ஜாமீனில் விடுதலை செய்தார்.
Related Tags :
Next Story