துபாயில் இருந்து திருச்சிக்கு கடத்தப்பட்ட 1½ கிலோ தங்க நகைகள், காசுகள் பறிமுதல் ஒருவர் கைது


துபாயில் இருந்து திருச்சிக்கு கடத்தப்பட்ட 1½ கிலோ தங்க நகைகள், காசுகள் பறிமுதல் ஒருவர் கைது
x
தினத்தந்தி 20 Sept 2019 4:30 AM IST (Updated: 19 Sept 2019 10:57 PM IST)
t-max-icont-min-icon

துபாயில் இருந்து திருச்சிக்கு கடத்தப்பட்ட 1½ கிலோ தங்க நகைகள், காசுகளை திருச்சி விமான நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக ஒரு பயணியை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செம்பட்டு,

திருச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, கொச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கும், மலேசியா, இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் அங்கிருந்தும் விமானங்கள் திருச்சி விமான நிலையத்திற்கு வந்து செல்கின்றன. இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் சிலர் தங்கம், மின்னணு பொருட்கள், வெளிநாட்டு பணம் போன்றவற்றை கடத்தி வருவார்கள்.

இதை தடுக்க திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் அவர்களுடைய உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம். கடந்த சில நாட்களாக இவ்வாறு நடத்தப்பட்ட சோதனையில் பல பயணிகளிடம் இருந்து தங்கம் மற்றும் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பயணி கைது

இந்த நிலையில் துபாயில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சிக்கு வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை திருச்சி விமான நிலைய வான்நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை உதவி ஆணையர் பண்டாரம் தலைமையிலான அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, திருச்சியை சேர்ந்த ப‌ஷீர்அகமது 1,247 கிராம் எடை கொண்ட நிறமாற்றம் செய்யப்பட்ட 22 தங்க காசுகளை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து ப‌ஷீர் அகமதுவை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரிடம் இருந்து தங்க காசுகளை பறிமுதல் செய்தனர்.

ரூ.54 லட்சம்

இதுபோல் அதே விமானத்தில் வந்த மற்றொரு பயணியான திருவாரூரை சேர்ந்த முகமது சுலைமான் என்பவர் 186 கிராம் எடை கொண்ட 5 தங்க வளையல்கள் மற்றும் கைச்சங்கிலியை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து தங்க வளையல்கள் மற்றும் கைச்சங்கிலியை பறிமுதல் செய்ததுடன், முகமது சுலைமானிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 2 பேரிடமும் பறிமுதல் செய்யப்பட்ட 1,433 கிராம் தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ.54 லட்சம் ஆகும்.

Next Story