கோவையில், 2 ஆயிரம் பெண்களுக்கு திருமண நிதியுதவி-தாலிக்கு தங்கம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்


கோவையில், 2 ஆயிரம் பெண்களுக்கு திருமண நிதியுதவி-தாலிக்கு தங்கம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்
x
தினத்தந்தி 2 Oct 2019 10:45 PM GMT (Updated: 2 Oct 2019 5:52 PM GMT)

கோவையில் 2 ஆயிரம் பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

கோவை,

கோவை மாவட்ட சமூகநலத்துறை சார்பில் 2 ஆயிரம் பெண்களுக்கு திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா கோவையில் நடைபெற்றது. விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு படித்த ஏழை பெண்களின் திருமணத்திற்கு ரூ.14.11 கோடி மதிப்பில் திருமண நிதியுதவி தொகையுடன் தாலிக்கு தங்கம் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் பெண்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொற்கால ஆட்சி நடைபெற்று வருகிறது.

ஏழை குடும்பங்களுக்கு விலையில்லா மிக்சி, மின்விசிறி, கிரைண்டர், விலையில்லா வெள்ளாடுகள், கறவை மாடுகள் வழங்கும் திட்டம், முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவி வழங்கும் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையர் திருமண நிதியுதவி திட்டம், உழைக்கும் மகளிர்களுக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம் போன்ற திட்டங்களால் தமிழகத்தில் படிக்கும் பெண்களின் சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளது.

மேலும் வருவாய் ஈட்டும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. சமூக நலத்துறையின் மூலம் ஏழை-எளிய பெண்களுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், ஈ.வெ.ரா. மணியம்மையார் விதவைகள் திருமண நிதியுதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் நினைவு விதவை மறுமண நிதியுதவி திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் திருமணத்திற்கு 8 கிராம் தங்கத்துடன் நிதியுதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.

திருமண நிதியுதவி திட்டத்தின் மூலம் கடந்த 7 ஆண்டுகளில் 36,894 பயனாளிகளுக்கு ரூ.164.8 கோடி மதிப்பிலான திருமணநிதி உதவி வழங்கப்பட்டு உள்ளது. சமூக நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் பெண்களுக்கான சிறப்புத் திட்டங்களில் பயன்பெற உரிய சான்றுகளுடன் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் கோவை மாவட்டத்தில் மூன்றாம் பாலினத்தவரையும், நமது சமுதாயத்தின் அங்கமாக அங்கீகரித்து, அவர்கள் வாழ்வில் வளம் பெற கடந்த 2 ஆண்டுகளில் 65 திருநங்கைகளுக்கு தொழிற்பயிற்சி மற்றும் சுயதொழில் தொடங்க ரூ.9 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இதில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கலெக்டர் ராஜாமணி, ஏ.கே.செல்வராஜ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், ஓ.கே.சின்னராஜ், வி.சி.ஆறுக்குட்டி, எட்டிமடை சண்முகம், வி.பி.கந்தசாமி, கஸ்தூரி வாசு மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், வருவாய் கோட்டாட்சியர் (தெற்கு) தனலிங்கம், மாவட்ட சமூக நல அலுவலர் தங்கமணி, வால்பாறை அமீது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story