ஆக்கிரமிப்புகளை அகற்ற உதவியதால் கொலை செய்யப்பட்ட தலையாரி மகளுக்கு கிராம நிர்வாக அலுவலர் பணி
ஆக்கிரமிப்புகளை அகற்ற உதவியதால் கொலை செய்யப்பட்ட தலையாரியின் மகளுக்கு கிராம நிர்வாக அலுவலர் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான ஆணையை தேவகோட்டை கோட்டாட்சியர் நேரில் வழங்கினார்.
தேவகோட்டை,
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா திருவேகம்பத்தூர் கிராமத்தில் தலையாரியாக பணியாற்றி வந்தவர், ராதாகிருஷ்ணன். இவர் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு உதவியதால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கணேசன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் கைதானவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும், தலையாரி ராதாகிருஷ்ணன் மகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை உடனடியாக வழங்க வேண்டும், அவரது குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி உதவியை தமிழக அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கருணை அடிப்படையில் தலையாரி ராதாகிருஷ்ணன் மகள் தாரணிக்கு உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான ஆணையை 24 மணி நேரத்திற்குள் வழங்க உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் பணி ஆணையை தேவகோட்டை கோட்டாட்சியர் சங்கரநாராயணன், திருவேகம்பத்தூரில் உள்ள வீட்டிற்கு சென்று தலையாரி ராதாகிருஷ்ணன் மகள் தாரணிக்கு வழங்கினார். அப்போது தேவகோட்டை தாசில்தார் மேசியாதாஸ் மற்றும் வருவாய் துறையினர், கிராம உதவியாளர் சங்கத்தினர் உடனிருந்தனர்.
இந்த துரித நடவடிக்கையை மேற்கொண்ட கலெக்டர் ஜெயகாந்தனுக்கு அந்த கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.
Related Tags :
Next Story