“அ.தி.மு.க.வினர் பணத்தை நம்பியே தேர்தலை சந்திக்கின்றனர்” - கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு


“அ.தி.மு.க.வினர் பணத்தை நம்பியே தேர்தலை சந்திக்கின்றனர்” - கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 2 Oct 2019 11:00 PM GMT (Updated: 2 Oct 2019 9:40 PM GMT)

அ.தி.மு.க.வினர் பணத்தை நம்பியே தேர்தலை சந்திக்கின்றனர் என்று கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டினார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கனிமொழி நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க.வினர் எப்போதுமே பணத்தை மட்டும் நம்பி தேர்தலை சந்திக்க கூடியவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இதனை மக்கள் மத்தியிலும், தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கும் கொண்டு வர வேண்டும். இந்த தேர்தலில் அவர்கள் நிச்சயமாக பணத்தை மட்டுமே நம்பி வெற்றி பெறுவது என்பது நடக்காது. மக்கள் விழிப்போடு இருக்கிறார்கள். இந்த ஆட்சியின் அவலத்தை உணர்ந்து கொண்டு இருக்கிறார்கள். அதனால் எவ்வளவு பணம் செலவு செய்தாலும் தேர்தலில் அவர்களுக்கு வெற்றி கிடையாது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெற்றதாக கூறுகிறார்கள். மத்தியில் உள்ள பா.ஜனதா ஆட்சிக்கு அ.தி.மு.க.வினர் ஆதரவாக இருக்கின்றனர். தமிழக நலனுக்கு எதிராக எந்த திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தாலும் அதனை ஏற்றுக் கொண்டு, தமிழகத்துக்கு துரோகம் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொண்டு வாக்களித்தார்கள்.

நிச்சயமாக நாங்கள் எந்த தவறான வாக்குறுதிகளையும் கொடுக்கவில்லை. தி.மு.க.வினர் கொடுத்த அத்தனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றக்கூடியவர்கள். சொல்வதை செய்வோம் என்பது தலைவர் கருணாநிதியின் தாரக மந்திரமாக உள்ளது. அதைத்தான் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக் கொண்டு தொடர்ந்து பணியாற்றிக் கொண்டு இருக்கிறார். அதனை உணர்ந்து கொண்டுதான் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்களித்தார்கள். வரக்கூடிய இடைத்தேர்தல்களில் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் வெற்றி பெறப்போவது உறுதி.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story