‘நீட்’ தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் மு.க.ஸ்டாலின் பேட்டி


‘நீட்’ தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் மு.க.ஸ்டாலின் பேட்டி
x
தினத்தந்தி 3 Oct 2019 11:15 PM GMT (Updated: 3 Oct 2019 4:14 PM GMT)

‘நீட்’ தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

திருவாரூர்,

திருவாரூர் அருகே காட்டூரில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை நினைவுகூரும் வகையிலான அருங்காட்சியகம் அமைய உள்ளது. இதற்கான இடத்தை பத்திரப்பதிவு செய்வதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் திருவாரூர் வந்தார். இரவு திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள அவரது வீட்டில் தங்கினார்.

நேற்று காலை மு.க.ஸ்டாலின் வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவருடைய சகோதரி செல்வி உடன் இருந்தார்.

இதையடுத்து காட்டூரில் கருணாநிதி அருங்காட்சியகம் அமைய உள்ள சுமார் 2½ ஏக்கர் இடம் மு.க.ஸ்டாலின், செல்வி ஆகியோர் பெயரில் பதிவு செய்யப்பட்டது. இதற்கான பத்திரப்பதிவு திருவாரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்தது. பத்திரப்பதிவு முடிந்த பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர் அருகே உள்ள காட்டூரில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி பெயரில், அவருடைய வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. அதற்காக நானும், எனது தங்கை செல்வியும் ஒரு இடத்தை வாங்கி உள்ளோம். விரைவில் அதற்கான கட்டுமான பணிகள் தொடங்கும். கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தில் அருங்காட்சியக திறப்பு விழா நடத்த முடிவு செய்துள்ளோம். அருங்காட்சியகம் அமைய உள்ள இடத்துக்கான பத்திரப்பதிவு நடந்துள்ளது.

‘நீட்’ தேர்வில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்து உள்ளதாக செய்திகள் வருகின்றன. ‘நீட்’ தேர்வினை அடியோடு ஒழிக்க வேண்டும். அது இருக்கவே கூடாது என்ற கொள்கையில் தி.மு.க. உறுதியாக உள்ளது. ‘நீட்’ தேர்வில் சான்றிதழ் பெறுவது, தேர்வு எழுதுவது போன்றவற்றில் தரகர்கள் மூலமாக முறைகேடுகள் நடந்துள்ளன.

தமிழகத்தில் உள்ள தரகர்கள் மட்டுமல்ல, பல்வேறு மாநிலங்களில் உள்ள தரகர்களும் ஒன்று சேர்ந்து சில அதிகாரிகள், ஆட்சியாளர்களின் துணையோடு முறைகேடுகளை செய்து உள்ளனர். இதை அரசு வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறது. ஏதோ கண்துடைப்புக்காக சி.பி.சி.ஐ.டி. விசாரணை என அறிவிப்பு செய்து உள்ளனர்.

சி.பி.சி.ஐ.டி. என்பது அரசுக்கு கட்டுப்பட்டு இருக்கின்ற துறையாகும் என்பதால் நியாயம் கிடைக்க வாய்ப்பில்லை. எனவே சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான் உண்மை வெளிவரும். திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மட்டுமல்ல பல மருத்துவமனைகளில் காலிப்பணியிடங்கள் உள்ளன. இதன் காரணமாக டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது.

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் 19 டாக்டர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. மருத்துவமனையில் மொத்தமாக 25 சதவீதம் டாக்டர்களே உள்ளனர். இதைவிட கொடுமை என்னவென்றால் இங்குள்ள மருத்துவ கருவிகளை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றுவதாக செய்திகள் வந்துள்ளன.

இதை தடுத்து நிறுத்த வேண்டும். டாக்டர்கள், ஊழியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது தி.மு.க. மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, நகர செயலாளர் பிரகா‌‌ஷ், ஒன்றிய செயலாளர் கலியபெருமாள், நகரசபை முன்னாள் துணை தலைவர் செந்தில் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story